பக்கம் எண் :

சத்திய லோகம்

சிறிது நேரம் ஆலோசனை செய்துகொண்டிருந்து விட்டு, "இந்த மூடத் திகைப்புக்கும், சித்த சலனத்திற்கும், சோம்பருக்கும் இடந்தரலாகாது. இனி நமது வாழ்நாளை சத்திய நாட்டத்திலேதான் செலவிடவேண்டும்" என்ற நிச்சயம் செய்துகொண்டேன். அப்போது மனம் சொல்வதாயிற்று: - "கந்தர்வ லோகத்திலேயிருந்த சுகம் இங்கே உண்டா? ஆகா! அதிலே நாம் சலிப்படைந்தது பிசகென்று இப்பொழுதுதான் தெரிகிறது. மீண்டும் அங்கே போகலாம் வா, உனக்கு அந்நாட்டு இசையும், வானும், நீரும், ஒளியும், மலரும், மாதரும் தந்த இன்பங்களைக் காட்டிலும் அதிகமாகவா இந்தக் கிரணமூர்கின்ற ஆமைத்தொழிலிலே கிடைக்கப்போகின்றது?" இது கேட்டு, ஒரு க்ஷணம் மறுபடி சலனமடைந்தேன். பின் பூர்வ தர்மப் பயனால் எனக்கு என்றுமறியாத தைரியம் பிறந்தது.

"மனமே! உன்னை அறிந்து விட்டேன். எனது நன்மைக் கெல்லாம் நீ கேடு சூழ்வாய். எனக்கு வருந் தீமைகளுக்கெல்லாம் நீ உபகாரம் செய்வாய். இதோ உன்னைக் கொன்றுவிடுகிறேன். பார்" என்று, அதன் கழுத்திலே கைபோட்டு விட்டேன். மனம் கோ கோ வென்றலறிற்று. அப்போது மறுபடியும் ஆகாசத்திலிருந்து பின்வரும் வாக்குப் பிறந்தது: - "மானிடா, வீண் முயற்சி செய்யாதே. மனதை உன்னால் கொல்ல முடியாது. மனங்கடந்த நிலையிலே நீ தாகத்துடன் பாயும்போது அது தானாகவே மடிந்து சூனியமாகிவிடும். அதற்குப் உனக்குப் பக்குவம் வரவில்லை. அதுவரை நீ எது செய்தாலும் மனம் சாகாது. மேலும் நீ உனது யாத்திரையை வினோதார்த்தமாகத் தொடங்கினாய். வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு சத்தியம் புலப்படாது. கந்தர்வ நாட்டிலே போய் இன்பங் கண்டது போல இங்கும் உண்மையை எளிதில் கண்டு விடலாமென்ற பேதமை யெண்ணத்தை விட்டுவிடு. நீ பாக்கியவானாதலால், உனது தேர் நீ முன்கண்ட வேறு பலரின் தேர்களைப்போல, இங்கிருந்து துரத்துண்ணாமல், இங்கே நிற்பதற்கும், சஞ்சரிப்பதற்கும் வலிமையுடையதாயிருக்கிறது.