மேலும், பூ, புவ, ஸ்வ, மஹ, ஜன, தப என்ற ஆறு உலகமும் கடந்துவந்த ஜீவர்களே சத்திய லோகத்தில் தரித்து நிற்க முடியும். நீ வர புருஷனாதலால் உனக்கு அத்தனை கஷ்டம் வேண்டுவதில்லை. நீ ஒருமுறை தர்மலோகத்திற்குப் போய், அங்கே உள்ள அனுபவங்களை அறிந்து வா. அப்பால் உனக்கு இப்போது நேர்ந்துள்ள உண்மை நாட்டம் பயன்பெறும். தர்மலோகத்தில் மனம் இறந்து போகாவிடினும், நீ விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அடங்கி உனக்குத் தொண்டுபுரியும். பின் இங்கு வந்தாயானால், மேல் நடக்கும் செய்திகளை நீயே அனுபவத்தில் தெரிந்துகொள்வாய். போய் வா" என்றது. கண்கள் சுழன்றன. சிறிது நேரம் மயக்கமுண்டாயிற்று. பின் மயக்கமுண்டாயிற்று. பின் மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி மண்ணுலகத்திலே, திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில், கிழக்கு முகமுள்ள வீட்டு மேன்மாடத்தில், நானும் என் பக்கத்திலே சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலை, பாக்கு முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்! |