பக்கம் எண் :

மண்ணுலகம்

துர்நாற்றம், இவற்றை யெல்லாம்கடந்து, முன் பகுதியிலே பசுமாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துகளுக்கெல்லாம் தப்பிப் பின் புறத்திலே "மெத்தை"க்கு வந்து சேர்ந்தேன். அங்கே எனது படுக்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேகிதர்கள் வந்தால் அவர்களுடன் சல்லாபம் முதலிய நாலாயிர விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அறையின் வெளிப்புறத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்றாள். "தலை நோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா" என்றேன். "ஆமாம்; இரண்டு நாளைக்கொரு முறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும், என்னை வேலை யேவுகிறதற்காக. அதெல்லாம் சரிதான், பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள். ராயர் நேற்றே சொன்னாராம். இந்த மாதம் குழந்தைக்குக் காப்பு வாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத் தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய்விட்டது," இன்னும், அது இது என்று ஆயிரங் கணக்கு சொன்னாள். அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எல்லாம் தீர்க்கவேண்டுமானால் குறைந்தபக்ஷம் மூன்று லக்ஷம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக "தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி யிறைக்கிறது; வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது; இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண் தான் கிடைக்கும்" என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.

"தலைநோவு தீர்ந்து போய்விட்டது. நீ தயவுசெய்து கீழே போகலாம்" என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்.