"ஆமாம்! ஊர்க்காரர் கூடவெல்லாம் ஓயாமல் பேசித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைத்துக் கொண்டிருக்கலாம். நான் ஒரு வார்த்தை பேசவந்தால் உடனே கோபம் வந்துவிடும்" என்றாள். அவள் மனதில் என்னைச் சமாதானப் படுத்துவதாக எண்ணம். அப்பால், பல தினங்கள் கழிந்த பின்புதான், நான் தர்மலோக யாத்திரை செய்வதாகத் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். இடையே நிகழ்ந்த சிற்சில சம்பவங்களும், காலதேச வர்ணனைகளுமே இங்கே எழுதப்படும். மண்ணுலகம் மிகப் பெரிது அதில் என் அனுபவ முழுவதையும் எழுத வேண்டுமானால் மகாபாரதத்தைப் போலப் பதினெட்டு மடங்கு புஸ்தகமாகும். இங்கு ஓரிரண்டு "மாதிரி ஸீன்"களே குறிப்பிடப்படும். 20-ம் தேதி : - குழந்தைக்குக் காய்ச்சல். மனைவிக்குக் காதுவலி. எனக்குப் பித்தக் கிறுகிறுப்பு. 21-ம் தேதி : - தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய கடைசி நாள். நான் காரியஸ்தலத்திலிருந்து பணம் கொண்டுவந்து வைக்க மறந்து விட்டேன். அவன் அது பற்றிப் பாடசாலைக்குப் போவதையே நிறுத்தி விட்டான். நான் சுதேசிய விஷயத்தில் ஊக்கத்துடன் பாடுபடுவதன் பொருட்டாக, என்னை இப்போதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள், எனது தம்பியிடம் செய்த சம்பாஷணையில் "உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னாரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்" என்ற மங்கள சமாசாரம் சொல்லி விட்டுப் போனதாகத் தம்பி வந்து சொன்னான். 22-ம் தேதி : - மனைவிக்கும் சிறிய தாயாருக்கும் மனஸ்தாபம் வந்து விட்டது. ஒருவரையொருவர் மாற்றி என்னிடம் பிழைகூறத் தலைப்பட்டார்கள். என் ஜீவதர்மமாகிய 'சுதேசியம்' தப்பு முயற்சியென்றும், வீணென்றும், அதில் நான் தலையிட்டதிலிருந்து குடும்பத்துக்குப் பற்பல கேடுகளுண்டாகு மென்றும் சிறு தாயார் சன்மார்க்க போதனை செய்தாள். என் மூக்கில் அடிக்கடி ஒருவித ஊறுதல் உண்டாவது போலத் தோன்றிற்று. அது ஓர் பொல்லாத நோயாயிருக்குமோ என்ற மூடத்தனமான கவலை கொண்டேன். அக் கவலையிலிருந்து மனதை அடிக்கடி திருப்பியும், மனம் மீட்டும் மீட்டும் அதில் போய் விழுந்தது. |