23-ம் தேதி : - வெற்றிலையில் சுண்ணாம்பு அதிகமாகச் சேர்ந்து விட்டபடியால், வாயெல்லாம் புண்ணாய்ப் போய்விட்டது. வாய்க்குள் ஜலம் விடுவதற்குக் கூடத் தகுதியில்லை. எனக்கு சாதாரணமாகவே உழைப்பு அதிகமாதலால், அத்துடன் சோறும் விழுங்க முடியாமற் போகவே, சோர்வும் முகக் கடுகடுப்பும் அதிகப்பட்டன. இத்யாதி, இத்யாதி. நாள் தவறினாலும், இந்தக் கணக்குத் தவறுவதில்லை. சீச்சீ! இந்த மண்ணுலகம் ஓரிடமா? இதில் மனிதன் வசிக்கலாமா? ஆமைகளும், ஓநாய்களும் வாழலாம். இது துன்பக் களம். இது சிறுமைக் களஞ்சியம். இது நரகம். இதில் வெறுப்படையாத மனிதர்களின் முகத்திலேகூட விழிக்கலாகாது. வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்தமானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண்பித்தேன். இனி, வெளி வியாபாரங்கள், எனது மித்திரர், அயலார் முதலியவர்களின் செய்திகள் சம்பந்தமாகச் சில திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணியிலே "செ...... சங்கம்" என்பதாக ஓர் தேசபக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, "காரியங்கள்" - ஒரு காரியமும் நடக்கவில்லை - நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று, அந்தச் சபை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும். |