பக்கம் எண் :

மண்ணுலகம்

நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; 'காலணா'வின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத்தொண்டரடிப்பொடி யாழ்வார் எங்களெல்லோரைக் காட்டிலும் வாய்ப்பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். மற்றொருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன் "நாம் இந்த `ரேட்'டில் இந்த விதமாகவே - வேலை செய்து கொண்டுவந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறுமாதத்தில் காற்றாய்ப் போய்விடும்" என்பான். மற்றொருவன் "சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார். ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது" என்பான். தவளை யுருவங்கொண்ட மூன்றாமொருவன்: - "ஆறு மாத மென்று சொல்லடா" என்று திருத்திக் கொடுப்பான்.

ப......ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர். அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்த மடைந்து கொண்டிருப்பார். ஆனால், ஒரு தேவதை அவரிடம் வந்து, "உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளை சூரியோதயத்திற்கு முன்பு சம்பாதித்துக் கொடுக்கிறேன். நீ உன் வீட்டிலிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக்கொண்டுவா" என்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார், "தேவதையே, உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சக்த்யை நம:, ஓம் பராயை நம:, இத்யாதி; அம்பிகே, இந்த உபகாரத்திற்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறோம்? எங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும். ஆனால், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக்காரியம்.