அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்த முடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று. இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப்போகிற 'மீட்டிங்'கில் பேசித் தீர்மானம் செய்கிறோம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந்தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தே மாதரம்" என்று மறுமொழி சொல்லியனுப்பிவிடுவார். ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை. ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது; உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாயிருக்கும் வாழ்க்கை. ஒவ்வொருவனும் மற்றவன்மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டு விட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான். ஆனால் "ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லை" என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லை யென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ, மூடா! நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கின்றது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். இப் பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம். அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம். ருசி சகிதமான விருப்பமுடையோர் கந்தர்வர்கள். அறிவு சத்தியலோகக் கருவி. இன்னும் எத்தனையோ காட்சிகள் மண்ணுலகத்திலிருந்து எடுத்துக்காட்ட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், பயனற்ற இவ்வுலகத்தைப் பற்றி அதிகமாக விஸ்தரிப்பது பயனுடைய கார்யமாகாது என்பது கருதி இத்துடன் நிறுத்தி விடுகின்றேன். |