பக்கம் எண் :

ஞானரதம் - தர்மலோகம்

சில தினங்களின் பிறகு, ஒரு நாள் ஞான ரதத்தில் ஊர்ந்து தர்மலோகத்திற்குப் போனேன். கந்தர்வ லோகத்திற்குப் போனவுடன் தேரிலிருந்து இறங்கி யதேச்சையாகத் திரிந்ததுபோல, இங்கும் சஞ்சரிக்கலாமென்று கருதித் தேரை விட்டு இறங்கினேன். அப்போது, தெளிந்த வதனமும், அகன்ற அடங்கிய விழிகளும், கருமையாகச் சுருள்கள் அமைந்த தாடியும், வலக்கையிலே ஒரு சுவடியும் கொண்ட ஒரு வாலிபன் என் முன்னே வந்து, "தேரை விட்டிறங்க வேண்டாம். அதிலேயே இரு; நானும் ஏறிக் கொள்ளுகிறேன். உன்னுடன் வந்து உனக்கு இந்நாட்டின் விஷயங்களைக் காண்பிக்கவேண்டும் என்று எனக்குத் தர்மதேவதையின் கட்டளை" என்றான்.

நான் அவனைக் கண்டவுடனே, அவனிடம் எனக்கு ஒரு விதமான அச்சமும் மதிப்பும் ஜனித்தன. அவனைப் போன்ற துணைவன் இருந்தால் பல அரிய விஷயங்கள் தெரிவதுடன், நற்கதியும் பெறலாம் என்று எனக்கு எக்காரணத்தாலோ மிக நிச்சயமாகத் தோன்றியது. அந்த வாலிபன் தேர்மீது வந்து ஏறிக்கொண்டான். மறுபடியும் அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தேன். ஆகா! என்ன அற்புத வடிவம்! அவன் தேகத்திலே ஒரு சுருங்கல் கிடையாது. ஒரு கோணல் இல்லை. அவனது அங்கங்களெல்லாம் தத்தம் இயற்கையளவுக்குச் சிறிதும் மாறுபடாமல் கணித தேவதையால் அமைக்கப்பட்டன போன்று விளங்கின. உடல் முழுவதும் ஒரு பிரகாசம் காணப்பட்டது. அது கந்தர்வ லோகத்தவரிடம் காணப்பெற்ற மயக்குந் தன்மை கொண்ட 'லாகிரி'ப் பளபளப்பன்று; இயற்கையின் திகழ்ச்சி. பிரகிருதியிலே, மலர், செடி முதலிய தத்தம் கடைமைகளை நேர்மையுறச் செலுத்தும் பொருள்களிலே, ஓர் விதமான திகழ்ச்சி தெரியவில்லையா? அவ்வகைப் பட்டது. சாஷ்டாங்கமாக அவன் பாதத்தில் விழுந்து வணங்கினேன். அவன் "தர்மம் சர," (அறத்தை ஒழுகு) என்று ஆசீர்வாதம் செய்தான்.