பின்பு, "மகனே, என் பெயர் தபஸ். நான் இந் நாட்டில் வழி காட்டும் தொழில் உடையவன். அவரவர்கள் எவ்வெத் தருமங்களைக் காண விரும்புகிறார்களோ அவ்வவற்றைக் காட்டுவேன். திமிங்கல முதல் புழுவரை ஒவ்வோருயிர்க்கும் அததற்குரிய தருமங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதலாக அணுக்கள் வரை ஒவ்வொரு வஸ்துவுக்கும் உரிய தர்மங்களுண்டு. மேலும், ஒன்றிற்கே காலதேச வர்த்த மானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வர வேண்டுமானால், பதினாயிரம் வருஷங்கள் போதா. ஆதலால், நீ எந்த தர்மங்களை முக்கியமாக அறிய விருப்பமுள்ளது என்று குறிப்பிடுவாயோ, நான் அவற்றை மட்டும் உனக்குக் கொண்டு காட்டுவேன். வேறு பல விஷயங்களையும் நீ பொதுப்படையாகப் பார்த்துக்கொண்டு போகலாம்" என்று கூறினான். அதற்கு நான், "முனிவரே, நான் பிராமண தருமத்தையும், க்ஷத்திரிய தருமத்தையும் அறிய விரும்புகிறேன்" என்றேன். "நல்லது, என்னுடன் வா; பிரதமத்திலே அறக்கடவுளின் ஆலயத்தில் போய் வழிபாடு செய்துவிட்டு வரலாம்" என்றான். இருவரும் உடன் சென்றோம். இடைவழியில் என்ன பொருள்கள் உள்ளதென்பதைப் பார்க்கக்கூட முடியாதபடி கண் மூடித் திறக்கு முன்பாகத்தூய வெண்மை நிறங்கொண்ட ஸ்படிகத்தால் மிக விசாலமாகக் கட்டப்பட்ட ஓர் ஆலயத்தினருகே வந்து சேர்ந்தோம். பின்புறத்திலிருந்திறங்கித் தபோமுனி முன் செல்ல, நான் அவரைத் தொடர்ந்து, அவ்வாலயத்துக்குள்ளே இருவரும் புகுந்தோம். "ஜயதர்ம ராஜாய, ஜயயமாய, ஜய வைவஸ்வதாயா, ஜய ஸூர்ய தேஜஸ்வினே, ஜய மஹோக்ராய, ஜய மஹாசாந்தாய," என்ற ஒலிகள் கேட்டன. என் மனம் திடுக்கிட்டது. கை கால்கள் நடுங்கின. உடம்பெல்லாம் வெயர்த்து விட்டது. பதறிப் போய், "முனிவரே, எங்கே அழைத்துச் செல்லுகிறீர்?" |