என்று கேட்டேன். "யம சன்னிதானத்துக்கு" என்றார். "ஏன்? ஐயா, எதற்கு?" என்று அலறினேன். முனிவர் என் பக்கமாகத் திரும்பி என் மெய்யைத் தடவித் தமது விசாலமான அருள் விழிகளின் பார்வையை எனது கண்களிலே செலுத்தி, "அஞ்சாதே, அறத்துக்கு அஞ்சலாமா?" என்றனர். எனது பொறுத்தலரிய பயம் தெளிந்து விடும்போல் இருந்தது. அதற்குள் மூர்ச்சை போய் விழுந்து விட்டேன். அப்போடு சில கனவுகள் கண்டேன். "ஆ! என்ன தீய கனவுகள்! பெரிய பெரிய புழுக்கள் வந்து என்னை விழுங்குவது போலிருந்தது. ஐயோ! என்ன பாதகம் செய்தோ நரகத்தில் வந்து விழுந்துவிட்டேன். நரகத்தில் நெருப்பால் சுடுவார்கள், அங்கத்தையெல்லாம் வெட்டி வெட்டிச் சித்திரவதை செய்வார்கள் என்று சொன்னார்களே! அப்படி யெல்லாம் செய்தாலுங்கூட நான் பொறுத்திருப்பேனே, பொறுக்க முடியாத அசுசி கொண்ட உயிர்களுக்கும் பொருள்களுக்குமிடையே என்னைப் போட்டு இம்சை செய்கிறார்களே! ஈசா, அசுத்தமான எண்ணங்கள் எண்ணியதற்கும், அசுத்தமான வஸ்துக்களை விரும்பியதற்கும் இதுவா தண்டனை! ஐயோ! அந்த நாளில் தெரியாமற் போய்விட்டதே. உற்றார், நண்பர்கள், அயலார், எல்லோரும் அசுத்த சிந்தைகளில் ஆழ்ந்திருந்தபடியால், அவர்களுடைய சகவாசத்தாலல்லவோ, நானும் கெட்டுப்போய்விட்டேன். எனக்குத் தெரியாதே," என்று கூவினேன். "அதோ, அதோ, அதோ பார்! எனக்குத் தெரிந்தவர்களாக எத்தனையோ பேர் வந்து நான் படும்பாடுகளையே அனுபவித்துக் கொண்டு கிடக்கிறார்கள். சிலர் என்னைக் கண்டு வெட்கமடைகிறார்கள். ஓர் பிரமாண்டமான சங்கு பூச்சியின் கொம்புகளின் கீழ் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். சிலர் என்னைக் கண்டு அழுகிறார்கள். |