பக்கம் எண் :

தர்மலோகம்

அப்பப்பா! நத்தை, நண்டு, பாச்சை, பல்லி - எல்லாம் பெரிய பெரிய ஆகிருதி - இவற்றினிடையேயும், இவற்றைக் காட்டிலும் அசுத்த வஸ்துக்களினிடையேயும், நான் கண்ட அனுபவங்களை இங்கே எழுதவும் கூச்சமுண்டாகிறது. மானிடர்களே! அசுத்த எண்ணங்களை நீக்குங்கள். அன்பினால் சொல்லுகிறேன். அசுசியான சிந்தனைகள் வேண்டாம் ஈசா, அனலிலே போடும், என்னை அனலிலே போடும். எனக்கு இந்த நிலை போதும், போதும். இனிப் பாவம் செய்யமாட்டேன்" என்று கூறி விம்மி விம்மி அழுதேன்.

"பின் பார்க்கிறேன். என்னை மற்றோரிடத்தில் போட்டிருந்தார்கள். என் மேலெல்லாம் நோய்கள் தோன்றி இருந்தன. கரிய குஷ்டம், யானைக்கால், பக்ஷவாதம், க்ஷயம், குன்மம்; ஒன்றா, இரண்டா? உடலிலே பிரியங் கொண்டு அதன் போஷணைக்காக அதர்மங்கள் செய்யும் மூடர்களே, உங்களை எச்சரிக்கின்றேன். ஐயோ! ஏன் கெடுகிறீர்கள்?"

சிறிது நேரம் கழிந்தது. நெருப்புக்குள்ளே என்னைச் சில பிசாசுகள் கொண்டு தள்ளின. ஆரம்பத்தில் அனல் வந்தாலும் பெரிதில்லை என்று எண்ணிய நான் அனற் குழியைக் கண்டவுடன் கால்களால் உதைத்தும், பல்லால் கடித்தும், கையால் மோதியும் அந்தப் பிசாசுகளிடமிருந்து திமிறிக்கொள்ள முயன்றேன். "ஐயோ! அவைகளுக்குத் தான் என்ன பலமடா? என்னை ஒவ்வொரு நெருப்புக் குழியாக முறையே போட்டுப் போட்டு எடுத்தன. மேல் தபிக்கிறதே, அங்கங்களெல்லாம் வேகின்றனவே. ஐயோ, வெட்டி வெட்டி ஆட்டிறைச்சியைத் தொங்க விடுவதுபோல் எனது கைகளையும், கால்களையும் தொங்கவிடுகிறார்களே என் முண்டத்தைத் தீப்பாறைகளில் மோதுகிறார்களே, என்னை எவரும் காப்பவர்களில்லையா? காப்பவர்களில்லையா? தபோமுனியே, வந்து ரக்ஷிக்கமாட்டாயா?" என்று கதறினேன். மூர்ச்சை தெளிந்து கண்களை விழித்துப் பார்த்தேன்.