தபோமுனி என் முகத்தை நீரால் துடைத்து, என்னைத் தூக்கி நிறுத்திக் கொண்டு தனது அருள் விழிகளிலே நீர் பொழிய, "மகனே, இனி, நீ சுகம் பெறுவாய். பிராப்த கருமங்கள் அனுபவித்தா லொழியத் தீரமாட்டா. நீ கண்ட கனவுகளை எல்லாம் மறந்துவிடு. முன் சென்ற துன்பத்திற்கு இப்போது நினைத்து வருந்துதல் பேதைமை. இனி, நல்லற வழியிலே நான் உன்னைக் கொண்டு சேர்க்கின்றேன். 'ஜய தர்மராஜாய' என்று சொல்" என்றார். "ஜய தர்மராஜாய" என்று வாழ்த்தினேன். பின்பு பல வளைவுப் பாதைகளின் வழியே சுற்றிச் சுற்றி என்னைக் கொண்டு போய், முனிவன் தர்மராஜாவின் சபையிலே கொண்டு சேர்த்தான். பளிங்குத் தளம், பளிங்குச் சுவர்கள், பளிங்குத் தூண்கள், வயிரச் சிங்காதனம். அதன் கீழே பொன்னாற் செய்யப்பட்ட பாம்பு, புலி இவற்றின் உருவங்கள் நசுங்கிக் கிடந்தன. சபா மண்டபத்திற்கு மேல்விதானம் கிடையாது. ஆகாயமே கூரை. சூரிய கிரணங்கள் நேரே தர்மராஜாவின் முடிமீது வந்து விழுகின்றன; அவருடைய ரத்தின மகுடத்தை ஜாஜ்வல்யமாகச் செய்கின்றன. சூர்யகுமாரனாதலால், அவனையும் அவன் சபையிலுள்ளோரையும் சூர்ய கிரணங்கள் சுடவில்லை யென்று தெரிந்து கொண்டேன். நெருப்பை நெருப்பு சுடுமா? தர்மராஜாவின் மகுடத்துக்கு நேரே உயர ஓர் அக்கினி வாள் இடைவானிலே பொறிகள் பறக்குமாறு தக தக வென்று ஒளி வீசி நிற்கின்றது. இது தர்மத்துக்கு ரக்ஷணை. தர்மத்தைப் பிறர் துன்பப்படுத்த வந்தால் அவர் தலையிலும், தர்மம் தானே சிறிது தவறுமாயின் அதன் தலையிலும் இவ்வாள் விழுந்து நாசப்படுத்திவிடும் என்பது அறிந்தேன். |