பக்கம் எண் :

தர்மலோகம்

தர்மராஜாவின் முகத்தைப் பார்த்தேன். பால கங்காதர திலகரின் முகத்துச் சாயல் கொஞ்சம் தென்பட்டது. இலேசான சாயல். ஆனால், தர்மராஜா தாமே காலமாதலால், காலத்தினால் மனிதர் முகத்தில் ஏற்படுத்தப்படும் சிதைவுகள் அவருடைய திவ்விய வதனத்தில் காணப்படவில்லை. பொன் வர்ணமுடையதும் வயிர ஸாரங் கொண்டதும் ஆகிய ஒரு அற்புத உலோகத்திலே வார்த்து, அதனுள்ளே மகா சக்தி கொண்ட உயிர்த் திகழ்ச்சி செலுத்தப்பட்டிருக்கிறது போல விளங்கிற்று.

இத்தனைக்கும் மேலே, அருட்ஜோதி கூத்தாடுகின்றது. தர்மம் இரக்கமில்லாதது என்று நான் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். சிங்காதனத்தைப் போலவே நெஞ்சமும் வயிரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாமென்று நினைத்தேன். அது பிழை. தர்மம் பக்ஷபாதமற்றது. குருட்டன்பு இல்லாதது. ஆனால், அருளும் விவேகமும் கலந்து வார்க்கப்பட்ட விக்கிரகம் தர்மம்.

தபோமுனி என்னைக் கொண்டு தர்மராஜாவின் திருமுன்னே நிறுத்தினார். தருமன் முகமலர்ந்து "வருக" என்று சொல்லி, "ஓம்" என்று ஆசீர்வதித்தான். அவன் வாய்திறக்கு முன்பாகவே நான் அவன் தாளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக வணங்கி அவன் பாத விரல்களைக் கண்ணீரால் நனைத்துவிட்டு எழுந்து நின்றேன்.

தர்மன் என்னை நோக்கி "உனது பாவங்களெல்லாம் நீங்கிப் போயின. உன் குறைகளெல்லாம் தீர்ந்து நீ பரிபூர்ணம் பெறும் மார்க்கத்திலே செல்வதற்குத் தகுதியுடையவனாய் விட்டாய். இனி இந்திரிய விருத்திகளிலே உன் மனம் செல்லமாட்டாது. அற்பப் பொருள்களிலே ஆசை வைக்கமாட்டாய். ஆணவத்திலே அடங்கி நிற்க மாட்டாய். மனம் உன் வசப்பட்டு நீ சொன்னபடி யெல்லாம் கேட்கும். தபோமுனி நீ விரும்பியதையெல்லாம் காட்டுவான். உனக்கு மங்கள முண்டாகுக!" என்றான். அவனை மறுபடியும் வணங்கி விடை பெற்றுக்கொண்டேன்.