அடர்ந்ததோர் காட்டிற்கு என்னை முனி அழைத்துச் சென்றான். அதனருகே ஏறக்குறைய இருபது சிறிய கூரை வீடுகளுள்ள ஒரு கிராமம். ஒவ்வொரு கூரை வீட்டையும் சூழ்ந்து ஒரு தோட்டம். வீடுகள் நெருக்கமாகச் சேர்ந்திருக்கவில்லை. விஸ்தாரமான இடைகள் விட்டுக் கட்டப்பட்டிருந்தன. வனப்பு, சுத்தம், வணங்குதற்குரிய எளிமை என்னும் இம் மூன்று குணங்களுக்கும் ஒவ்வொரு வீடும் இலக்கியமாக விளங்கிற்று. அசுசியான தோற்றமேனும், நாற்றமேனும், அங்கு தேடித் தேடிப் பார்த்தாலும் கிடையாது. அவ்வனத்திலும் அதி சுத்தமாயிருந்த வீட்டிற்குள் நானும் முனிவனும் சென்றோம். அங்கே ஒரு பிராமணன் விசாலமான தோள்களும், ஞானச் சுடர் விடும் முகமும், பரந்த கண்களும், வெளுத்து நீண்ட தாடியும் உடையவனாக வீற்றிருந்தான். அவனுக் கெதிரே ஐந்தாறு சிஷ்யர்கள் சுவடிகள் கையிலே வைத்துக்கொண்டு பாடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் தபோமுனியும் போனவுடன் எங்களுக்கு வழக்கப்படி உபசாரங்கள் கூறி உட்கார வைத்து விட்டு, மாணாக்கர்களை நோக்கி: - "மக்களே, இன்றைக்குப் பாடம் போதும், போய் வாருங்கள்" என்றான். நான் "பாடம் நடத்துங்கள். நாங்கள் இடையூறாக வந்ததைக் கருதவேண்டாம்" என்றேன். அதற்குப் பிராமணர் "அதனால் பாதகமில்லை. ஏற்கெனவே பாடத்தை முடிக்கும் நேரமாய்விட்டது. அதற்கேற்ப நீங்களும் வந்து சேர்ந்தீர்கள். உங்கள் வரவினால் பாடத்திற்கு விக்கினமில்லை. இந்த உலகத்தில் அவரவர் தர்ம சேவைக்கு விக்கினங்கள் ஏற்படமாட்டா" என்று கூறினான். |