நெடிதோங்கி வளர்ந்த கோட்டைச் சுவர் வாயிலிலே போய் ரதம் நின்று விட்டது. நான் தூரத்திலிருந்தே அந்தக் கோட்டையைப் பார்க்க முடிந்ததாயினும், எனது ஞானத்தேர் போனவுடன் அந்த வாயிற்கதவுகள் தாமே திறந்து விடும் என்று எண்ணினேன். அவ்வாறு திறக்கவில்லை. என்ன ஆச்சரியம்! ஞானத்தேர்கூட நுழைய முடியாதபடி அத்தனை பரிசுத்தமானதா இந்த லோகம் என்று வியப்புற்றேன். எனது மனமோ முன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு என்னிடம் பேசக்கூட நாவெழவில்லை. கோட்டை வாயிலுக்கு வெளியே ஒரு வாயில் காப்பான் உருவின கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். நெருப்பு நிறங் கொண்டதும், இமயமலையைக்கூட ஒரே வெட்டில் பொடிப் பொடியாகச் செய்து விடுமென்று தோன்றியதுமாகிய அந்த வாளின்மீது "விவேகம்" என்று கண்ணைப் பறிக்கக்கூடிய ஜோதி யெழுத்திலே எழுதப்பட்டிருந்தது. வாயில் காப்பான், "யார் அது? எங்கு வந்தாய்?" என்றான். நான் அவனுக்கு வந்தனம் கூறிவிட்டு, "உபசாந்தி லோகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பலாமென்ற எண்ணத்துடன் வந்தேன்" என்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கடகடவென்று குலுங்கக் குலுங்க நகைக்கலாயினன். "ஏனையா சிரிக்கிறீர்?" என்று கேட்டேன். அவன் மறுமொழி கூறாமல் சிரித்துக் கொண்டிருந்தான். ஏழை மனமோ நிமிஷத்துக்கு நிமிஷம் அதிக திகிலுறுவதாயிற்று. எனக்கு மிகவும் திகைப்புண்டாய் விட்டது. எனவே, கோபத்துடன் வாயில்காப்பானை நோக்கி "ஏனப்பா, உள்ளே போகலாமா, கூடாதா? ஒரே வார்த்தையில் சொல்லிவிடு. கலகலவென்று சிரித்துக் கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டேன். அதற்கு வாயில்காப்பான், "உனக்கும் உபசாந்திக்கும் வெகுதூரம்" என்று தனது வாய்க்குள்ளேயே |