(ஆனால் எனது செவியிலே படும்படி) முணு முணுத்து விட்டுப் பிறகு "கோபங்கொள்ளாதே அப்பா; நீ உபசாந்தி லோகத்தை ஏதோ நாடகசாலை போலக் கருதிப் பார்த்துவிட்டுத் திரும்ப உத்தேசமிருப்பதாகக் கூறியது எனக்கு நகைப்பை உண்டாக்கிற்று. சாதாரணமாக, இவ்வுலகத்துக்கு வருபவர்கள் திரும்ப வெளியே போகும் வழக்கம் கிடையாது" என்று இரைந்து கூறினன். "அது சரி, உள்ளே நாங்கள் பிரவேசிக்கலாமா, கூடாதா? தயவுசெய்து சொல்லும்." "நீ சாதாரணமாகப் பிரவேசிக்கலாம். இது சகல ஜீவர்களுக்கும் தாய்வீடு. இங்கு வரக்கூடாது என்று எந்த ஜீவனையும் தடுக்க எனக்கு அதிகாரமில்லை. ஆனால் வைராக்கியக் கோட்டையைக் கடந்து உள்ளே செல்லும் உரிமை உன்னுடன் வந்திருக்கும் மனம் என்ற பொய்ப் பொருளுக்குக் கிடையாது. அது உள்ளே போகுமானால், அக்கினி லோகத்திலே பிரவேசித்த பஞ்சுப் பொம்மைபோல நாசமடைந்துவிடும்" என்றான். மனம் ஆரம்பத்திலேயே உபசாந்தி லோகம் என்ற பெயரைக் கேட்டவுடன் நடுங்கத் தொடங்கியதற்கும், அது என்னை அங்கு போகவேண்டாமென்று பிரார்த்தனைகள் செய்ததற்கும், கோட்டையருகே வந்தவுடன் தர்ம தேவதையின் முன் வந்து நிற்கும் கொடுங்கோலரசரைப்போல நிலைமயங்கி அதற்கு அளவுகடந்த திகிலுண்டானதற்கும் காரணம் இன்னது என்பதை இப்போதுதான் அறிந்தேன். அப்பால் அந்த உலகத்திற் பிரவேசிக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு நீங்கிப் போய்விட்டது. மனத்தினிடம் வைத்திருந்த மோகத்தால், அதைக் கொன்றுவிட்டு நான் இன்பமடைவதில் பிரியங் கொள்ளவில்லை. "என்னை இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்?" என்று வாயில்காப்பானிடம் கேட்டேன். அதற்கு அவன் |