"மானுடா, மனம் இறந்த பிறகுதான் உபசாந்தியுண்டு; அது இருக்கும் வரையில், கவலைகள் நீங்கி இருக்கலாம் என்ற எண்ணம் வீண். கவலைகளாகிய அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளிக்கொண்டே இருக்கும் தாய் மனமேயாகும். உனக்கு அந்தப் பொய்யரக்கியிடம் இன்னும் பிரேமை தீரவில்லை. பக்குவம் வந்த பிறகு, நீ தானே இங்கு வந்து சேரலாம். இப்போது போய் வா" என்று சொன்னான். திடீரென்று அந்தக் கோட்டை, வாயில்காப்பான் எல்லாம் மறைந்து போய்விட்டது. அரை க்ஷணம் கண்ணிருட்சி உண்டாயிற்று. பிறகு கண்ணை விழித்துப் பார்த்தேன். மறுபடி, வீரராகவ முதலித் தெருவில், முன்னே கூறப்பட்ட வீட்டு மாடியில், தனியே கட்டிலில் நான் படுத்துக் கொண்டிருப்பதையும், கடற்பாரிசத்தினின்றும் இனிய காற்று வீசிக்கொண்டிருப்பதையும் கண்டேன். "சரி, போனது போகட்டும். இந்த உபசாந்திப் பேறு நமக்கு இப்போது கிடைக்கவில்லை. ஆயினும் பாதகமில்லை. ஏழை மனத்தைக் கொன்றுவிட்டு நாம் மட்டும் தனியே இன்பமுற விரும்புவதும் நான்றி கெட்ட செய்கை யாகுமல்லவா? அதன் கவலைகளையும், உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனே யொழிய அதன் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. எனக்கு உலக வாழ்க்கையே இந்த மனத்தினால்தானே எய்திற்று. இதை ஈசனென்றே சொல்லத்தகும். மேலும், எனக்கு அதையும், அதற்கு என்னையும் காட்டிலும் உயிர்த்துணைவர் யார் இருக்கிறார்கள்? அதற்குத் துரோகம் செய்யலாமா? எத்தனை கோடி கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய உபசாந்தி லோகம் எத்தனை அரிதாயிருப்பினும், அது எனக்கு வேண்டாம்" என்று தீர்மானம் செய்து கொண்டேன், "உபசாந்தி என்று கத்தும் மனிதர்களை உலகத்தார் பிரமஞானிகளென்றும், மகரிஷிகளென்றும் புகழ்கிறார்களே! |