பக்கம் எண் :

தர்மலோகம்

"பாரமார்த்திகத்திலே பிரம்மஞான முடையவனே பிராமணன் என்ற பெயருக்குத் தகுதியுடையவனாவான். 'வஜ்ரஸூசிகை' என்ற உபநிஷத்திலே இதை நேர்த்தியாக எடுத்து விளக்கியிருக்கின்றார். ஆனாலும், விவகாரத்திலே உலகத்தாருக்கு அறிவுப்பயிற்சி கொடுக்கும் வகுப்பினர் பிராமணராவார்கள். சகலவிதமான நூல்களிலும் பயிற்சி கொண்டிருத்தல், அதனை உலகத்தாருக்குப் போதனை செய்து, உலகத்துத் தொழில்களெல்லாம் இனிது நடப்பதற்கு ஆதரவாயிருத்தல், லௌகிகப் பெருமைகளிலே ஆசையில்லாமை - இவையே சுருங்கச் சொல்லுமிடத்துப் பிராமண தர்மத்தின் சாராம்சங்களாகும்" என்று முடித்தார்.

பேசி முடிந்தவுடன் திடீரென்று எழுந்து வெளியே போனார். உடனே திரும்பி எங்களிடம் வந்து சந்தியா தியானத்திற்கு நேரமாய் விட்டதென்று தெரிவித்தார். மூவரும் எழுந்து, கிராமத்திற்கு வெளியே சிறிது தூரத்துக்கு அப்பால் மாஞ்சோலையை யடுத்துள்ள ஆற்றங்கரைக்குச் சென்றோம். சூர்ய கோளம் மேற்றிசை வானத்திலே பாதி மறைந்திருந்தது. மேகங்கள் எல்லாம் நெருப்புத் தீவுகள் போலத் தோன்றின. பிரகிருதி தேவி அற்புதமான அழகுடன் விளங்கினள். அத்தருணத்தில் ஸ்நாநம் முடித்துத் தனித்தனியாகத் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தனர். நான் "ஓம்" என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலாயினேன்.

ஜபதபங்கள் முடித்துக் கொண்டு மறுபடியும் கண்வ முனிவரின் வீட்டிற்கு வந்தோம். அங்கு நானும் தபோ முனிவரும் அவரிடம் விடைபெற்றுக் கொள்ள விரும்பிச் சில வார்த்தைகள் சொன்னோம். அதற்குக் கண்வர், "இராப் பொழுதாய்விட்டது. தாம் இருவரும் இன்றிரவை எனது சிறு குடிலிலேயே கழித்துக் கொண்டு போக வேண்டும்" என்றார்.