'எனக்கு உடனே, "மறுநாள் காலை ஆகாரத்திற்கு வீட்டிலே நெல் வைத்திருப்பவன் பிராமணனாக மாட்டான்" என்று சொல்லிய வசனம் ஞாபகத்திற்கு வந்தது. ஆதலால் அவர் மிகவும் எளியவராயிருப்பாரென்பது கருதி "வேண்டியதில்லை. நாங்கள் சென்று வருகிறோம், தயவுசெய்து மன்னிக்க வேண்டும்" என்றேன். கண்வமுனிக்கு எனது ஹிருதயம் தெரிந்து விட்டது. "சகோதரா, தர்மமுள்ள இடத்தில் வறுமை கிடையாது. நீர் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். தயவுசெய்து இவ்விரவு தங்கியே போகவேண்டும்" என்றார். எனக்கு வெட்கம் பொறுக்க முடியவில்லை. தலைகுனிந்து விட்டேன். முனிவர்கள் இருவரும் புன்னகை செய்தார்கள். பின்பு, இராப்பொழுதை அங்கேயே கழிப்பதாகத் தீர்மானம் செய்து கொண்டோம். கண்வர் வீட்டு நடையிலே ஓர் பாயின்மீது உட்கார்ந்திருந்தபோது, கந்தர்வ லோகத்தில் சுகந்த மாளிகையின் மாடத்திலே பர்வத குமாரியுடன் பஞ்சணைமீது உட்கார்ந்திருந்த பொழுதைக் காட்டிலும், என் மனதில் அதிக சாந்தி ஏற்பட்டு விளங்கிற்று. கண்வரும் தபோ முனிவரும் வேதாந்த விசாரணை செய்யத் தொடங்கினார்கள். தபோமுனிவர் விவகாரத்தின் நடுவிலே சில அருமையான விஷயங்கள் சொல்லினர். அப்போது கண்வருடைய பத்தினியும் வந்து உட்கார்ந்து கொண்டு சிரவணம் செய்தாள். |