கண்வருடைய பத்தினியை நோக்கும்போது, வேதங்களிலே படித்திருக்கும் மைத்ரேயி முதலிய ஸ்திரீகளின் சித்திரம் மனவிழியிலே எழுந்தது. கற்பு, தெளிவு, அடக்கம், அறிவு, தயை என்ற குணங்கள் அனைத்தும் அந்த தேவியைச் சூழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. முனிவர்களின் ஜீவகளை சம்பாஷணை ரஸத்தால் இயக்கத்தில் விளங்குவதும், தேவியின் ஜீவகளை அடக்கத்தில் ஒளிர்வதும், ஒப்பு நோக்கும்போது மிக நான்றாயிருந்தது. சிறிது நேரத்திற்கு அப்பால் கண்வரின் குமாரன் வந்து தாயின் பக்கத்திலே உட்கார்ந்தான். ஆ! இந்த வாலிபனைத் தவவேடத்திலே கண்டபோது என் மனம் பொறுக்கவில்லை. இவனை ராஜ குமாரனாக அமுத விழிகொண்ட மாதர்களோடு கொஞ்சிக்கொண்டிருக்கப் பார்க்க வேண்டும். இவனைச் சேனாதிபதியாக வாலிப வீரர்கள் சேர்ந்திருக்கும் சைன்ய முகத்திலே பார்க்க வேண்டும். கிரக கணங்களை அழைத்துக் கொண்டு பால சூரியன் முன்வருவதைப் போலிருக்கும் இவனுக்கா மரவுரி? இவனுக்கா வெறும் தானியமும், காய் கனிகளும் சேர்ந்த உணவு? இவனுக்கா சுனை நீர்ப்பானம்? இவனுக்கா இடைவிடாத ஏட்டுக் கவலை, கடபட விவகாரம்? முனிவர் பன்னிரண்டு குமாரர்களிலே தவத்திற்கென்று இவனைத் தெரிந்தெடுத்தது பிழையென்று என் சிந்தைக்குப் புலப்பட்டது. நான் இப்படி யோசனை செய்து கொண்டிருக்கும்போதே முனிவர்களின் வேதாந்த தர்க்கம் முடிந்துவிட்டது. தபோமுனி என் சிந்தையை விழியால் நேருக்கு நேராகப் பார்த்தவர் போன்று, "இத்தனை ராஜ லக்ஷணம் வாய்ந்த குமாரனைத் தாம் பிராமண தர்மத்திற்கு எடுத்துக் கொண்டு, மற்றப் பிள்ளைகளை யெல்லாம் வெளியே அனுப்பி விட்டமைக்கு முகாந்தரம் தெரிவிக்க வேண்டும்" என்று கண்வரிடம் கேட்டார். கண்வர் மகனை நோக்கிக் "குழந்தாய், இன்றைக்கு சோதிஷத்திலே - அதாவது, வானத்து கிரக நக்ஷத்திரங்களை அளக்கும் கணித நூல். எருமை மாடு கெட்டுப்போனால், வழிசொல்லப் படிக்கும் பல நூலன்று - தரிசனாப்பியாஸம் (பார்த்துப் பழகல்) செய்ய வேண்டிய தினமாயிற்றே. நீ தனியே போயிருந்து நக்ஷத்திர ஸ்தானங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டு வா" என்று சொல்லி அனுப்பிவிட்டார். |