மகனைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சில வார்த்தைகள் சொல்ல நேரிடுமாதலால், அவற்றை அவன் காதில் விழும்படி சொல்ல முனிவருக்கு விருப்பமில்லை. குமாரன் வெளியே சென்றான். பின்பு முனிவர் பின்வருமாறு சொல்லலாயினர்:- "அதர்மத்தைக் கொல்வதைக் காட்டிலும், அஞ்ஞானத்தைக் கொல்வதற்கு அதிக வீரத்தன்மை வேண்டும். ஜனங்களுக்கு சரீர சம்பந்தமான இன்மைகளைத் தவிர்த்து ரக்ஷிப்பது சூத்திர, வைசியர்கள் கடமை. தர்மத்தை க்ஷத்திரியன் ரக்ஷிக்கிறான். நான் முன்பு சொல்லியபடி, ஞானத்தைப் பிராமணன் சம்ரக்ஷணை செய்கிறான். பிராமணனுக்கு அளவற்ற வீர்யம் வேண்டும். அளவற்ற தேஜஸ் வேண்டும். அளவற்ற திடமும் பராக்கிரமமும் வேண்டும். அஞ்ஞானத்தின் படைகள் எண்ணற்றன. அஞ்ஞான ஊற்று வற்ற வற்றத் தொலையாது. அஞ்ஞான விருக்ஷத்தின் வேர் ஆதிசேஷன் முடிவரையிலே உண்டு. அப்படைகளை வெல்வதும், அவ்வூற்றை வற்றடிப்பதும், அந்த விஷமரத்தை வேரறுப்பதும், சாமான்யமான காரியமன்று. "மகாபாரதப் போரிலே, பார்த்தனைவிடக் கிருஷ்ணனுக்கு வேலை அதிகம். கிருஷ்ணனுக்கு எவ்வளவு வேலையுண்டோ, அவ்வளவு, வேலை வேதவியாசருக்கு முண்டு." |