பக்கம் எண் :

தர்மலோகம்

நானாவிதமான விஷயங்களைப்பற்றி சம்பாஷணை செய்துவிட்டு, இலேசான ஆகாரமுண்டு, பின் நித்திரைக்குப் போய்விட்டோம். மறுநாள் காலையில் எழுந்து தபோமுனிவரும் நானும் நித்யானுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு, சத்தியராமன் என்ற க்ஷத்ரிய வீரனுடைய மாளிகைக்குச் சென்றோம். தபோ முனிவர் வரவைக் கேட்டவுடனே, சத்தியராமன் எதிர்கொண்டு வந்து, உபசாரங்கள் பேசி ஓர் மண்டபத்திற்கு அழைத்துப் போய், எங்களை ஆசனங்களிலே அமர்வித்துத் தானும் வீற்றிருந்தான். முனிவர் மெல்ல என் கதையைத் தொடங்கினார். ன் தனது வீரத்தோள்கள் குலுங்க நகைத்துப் பின், "நான் காவலாளி, எனக்குச் சாதுரியமாகவும், தெளிவாகவும் ஒரு விஷயத்தை எடுத்து உபதேசிக்கும் திறமை கிடையாது. மேலும் தருமராஜனுடைய சேனைத் தலைவர்களில் என்னிலும் க்ஷத்திரிய குணங்களிலே சிறந்தோர் பலர் இருக்கின்றார்கள். அவர்களை யெல்லாம் விட்டுத் தரும திருஷ்டாந்தமாக அடியேனைத் தெரிந்து கொண்டதை, நான் பாக்கியமாகக் கருதுகின்றேனாயினும்,

எனது தகுதியின்மையைப் பற்றிய உணர்ச்சி என் மனதிலிருந்து மாறவில்லை" என்றான்.

பின்பு, என்னை நோக்கி, "தாம் கேள்விகள் கேட்டால் என்னால் இயன்றமட்டும் மறுமொழிகள் சொல்லி சந்தேக நிவர்த்தி செய்யக் காத்திருக்கிறேன்" என்று கூறினான்.

"க்ஷத்திரியனுக்குரிய கடமைகளிலே, முதற்பட்டதும், மற்றக் கடமைகளுக்கெல்லாம் ஆதாரமுமாகிய மூலதர்மம் யாது? அதை எனக்குத் தெளிவுறக் கூறவேண்டும்" என்றேன்.

முன்னே வீற்றிருந்த வீரனுடைய சிங்க முகத்திலே ஒளி வீசிற்று. கண்கள் அறிவுப் பொருளை உமிழ்வன போலத் தோன்றின. உடல் முழுவதிலும் ஒரு புதிய திகழ்ச்சியும், பூரிப்பும் கண்டேன்.

பரவசமடைந்து குரு சொல்லும் வசனங்களை அநுபவ நிலையிலிருக்கும் சீடன் கேட்பதுபோல அடங்காத தாகத்துடன் கேட்கலாயினேன்.