பக்கம் எண் :

தர்மலோகம்

"மித்திரா, க்ஷத்திரியனுடைய கடமைகள் பலவற்றிற்கும் எது தாய் என்று கேட்டாய். க்ஷத்திரியனுடைய முயற்சிகளுக்கெல்லாம் அடியிலுள்ள ஊற்றெது வென்று வினவினாய். அதனைச் சொல்லுகிறேன், கேள். அது போர்! போர்தான் க்ஷத்திரியனுடைய முதல் தருமம். போர்தான் உண்மையான க்ஷத்திரியனுக்கு மூச்சு. போரே அவனுடைய உயிர். எந்த க்ஷணத்திலே போரை நிறுத்துகின்றானோ, அந்தக் கணத்திலே க்ஷத்திரியன் பேடியாய் விடுகிறான். பின்பு அவன் மரம், அவன் பிரேதம், அவன் பொய், அவன் பேசுதற்கரிய இகழ்ச்சியாக முடிக்கின்றான். மித்திரா, நான் உனக்கு வேதாந்த சாஸ்திரம் சொல்லக்கூடியவனன்று. அதர்மம் ஆதியிலே எப்படி உண்டாயிற்றென்பதை நமது முனிவர் போன்ற ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள். ஆனால், ஒரு செய்தி மட்டும் நான் அறிவேன். அதர்மம் எப்போதும் நமது முன்னே நிற்கின்றது. எதன் பொருட்டு நிற்கின்றது? உன் கையால் கொலையுண்டு சாகும் பொருட்டாக. அது என்ன சொல்லுகிறது? 'அப்பா, உன் கையிலேயுள்ள கோடரியை என் தலையிலே அடித்து என் தலையை இரண்டு கூறாகப் பிளந்து விடு' என்று சொல்லுகிறது.

"அதர்மங்கள் ரக்த பீஜமுடையவை. கொல்லக்கொல்ல மேன்மேலும் பிறந்துகொண்டே யிருக்கும். க்ஷத்திரியனுடைய கடமை யாதென்றால் அவற்றைத் தன் உயிருள்ளவரை வெட்டித் தள்ளிக்கொண்டே யிருக்க வேண்டும். நாள்தோறும் சூர்யன் இருளைச் சுற்றிச் சுற்றித் துரத்திக் கொலை செய்துகொண்டு வருகிறான். சூரியனே முதலாவது க்ஷத்திரியன். எங்கள் குலத்துக்குப் பிதா மகன்.

"அதர்ம நாசத்திற்காகப் போர் செய்துகொண்டே யிருப்பதுதான் க்ஷத்திரிய தருமமென்று சொன்னேன். அத்தொழிலுக்கு உரிய பயிற்சியும் சாதனங்களும் கைக் கொள்ளுதல் அவசியமென்று கூறுதல் மிகையாம்" என்று முடித்தான்.