நித்தியமாக இருக்கும் அதர்மங்களை நாம் அடிக்கடி கொல்வதில்தான் என்ன பிரயோஜனம் என்றெண்ணித் திகைக்கலானேன். அந்தக் கேள்வியை சத்தியராமனிடம் கேட்டதற்கு அவன் சிறிதேனும் மயங்குதலின்றிப் பின் வருமாறு உத்தரமளித்தான்.
"தமோகுணம் கேட்கின்ற கேள்வி! மித்திரா, கர்மம் (தொழில்) செய்யாமல் மனிதன் அரை க்ஷணமேனும் இருக்க முடியாது. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே யிருக்கவேண்டும் என்பது விதி. அந்தக் கர்மத்தைக் கடலலைப்பட்ட துரும்புபோலச் செய்யாமல், சூர்யனை போலச் செய்வது பெருமையல்லவா? சாதாரண சரீர சுகங்களைப் பற்றிய காரியங்களிலே கூட மனிதன் இவ்வித யோசனை செய்வதில்லை. ஓயாமல் அழுக்காகும் உடலை நித்தியம் ஏன் தண்ணீரால் கழுவ வேண்டும்? கழுவக் கழுவ அதுதான் மேன்மேலும் அசுத்தப் பட்டுக்கொண்டு வருகிறதே, என்று யோசித்து எவனேனும் ஸ்நாநம் இல்லாமல் இருக்கிறானா? கணத்திலே தோன்றி அழியும் உடலுக்குச் செய்யும் உபசாரம் நிரந்தரமாகிய தர்மத்துக்குச் செய்யலாகாதா?
"மேலும், அதர்மம் தர்மத்திற்கு உணவு. ஆதலால் தர்மம் இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். இது நியாயமே. அதர்மம் முற்றிலும் இறந்து சூன்யமாய்ப் போய்விடுமானால், பின்பு தர்மம் உண்ண உணவில்லாமல் தானும் மடிந்துவிடும்" என்றான்.
* * *
தர்ம லோகத்தில் எனக்கு நெடுங்காலம் வசிக்கும் பாக்கியமில்லை. க்ஷத்திரிய வீரனுடைய வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு பலவிடங்களுக்கு என்னைத் தபோ முனிவர் கொண்டு சென்றார். அதன் பிறகு ஜீரணமாகாத ஓர் உணவு நெடுநேரத்திற்கப்பால் வயிற்று வலியுண்டாக்குவது போல, எனது புண்ணியத்தால் எரிக்கப்படாத ஓர் கர்மம் ஏதோ ஓர் மூலையினின்று வெளிப்பட்டு என் உள்ளத்திலே தர்ம சாதனைக்கு விரோதமாகிய ஓர் விருப்பத்தைக் கொண்டு நுழைந்தது. தபோமுனிவர் எனக்குப் பல தார்மிகப் புதுமைகளைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே அவ்விருப்பம் மீட்டுமீட்டும் எனது ஹிருதயத்தில் கிளைத்துக் கொண்டிருந்தது.