அப்போது ரஸிக சிரோமணி சொல்லுகிறது:- கேளாய், கர்வம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே! பல வருஷங்களின் முன்பு மதுரை மாசி வீதி மளிகை மாணிக்கஞ் செட்டி என்றொருவனிருந்தான். அவனுடைய தந்தை மளிகை வியாபாரஞ் செய்து கடன்பட்டு வீடு வாசலையிழந்து ஏழ்மையிலே இறந்து போனான். பின்பு மாணிக்கஞ் செட்டியின் தாய் கடலை சுண்டலும், தோசையும் விற்றுச் செட்டாகக் குடித்தனம் பண்ணித் தன் பிள்ளையை வளர்த்து வந்தாள். மாணிக்கஞ் செட்டிக்குப் பத்து வயதானவுடன் அவனை ஒரு பெரிய வியாபாரி தனது கடையிலே மாதம் அரை ரூபாய் சம்பளத்துக்கு வைத்துக் கொண்டான். இவன் தாயாரிடத்திலிருந்து செட்டு, கருத்து முதலிய நல்ல குணங்களைப் பயின்றவனாதலால், பெரிய வியாபாரிக்கும் இவன் மேலே தயவும் நம்பிக்கையும் உண்டாயின. பெரிய வியாபாரிக்குப் பிள்ளையில்லை. ஒரே பெண். அவள் பெயர் மரகதவல்லி. நாளடைவில் மாணிக்கஞ் செட்டியை வியாபாரி தன் கடையில் பங்காளியாகச் செய்து கொண்டான். தன் மகளை இவனுக்கே விவாகம் செய்து வைத்தான். அவன் இறந்த பிறகு உடைமையெல்லாம் மருமகனுக்கே வந்துவிட்டது. மதுரை மாசி வீதி மளிகைக் கடை மாணிக்கஞ் செட்டி என்று பிரக்யாதி ஏற்பட்டு விட்டது. இந்த மாணிக்கஞ் செட்டியினிடம், பதினாறு வயதுள்ள மானி அய்யன் என்ற பார்ப்பாரப் பிள்ளை ஒருவன் வந்தான். |