பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

கழுதை மகா கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டது. குயில், "மாமா, மாமா, கோபித்துக் கொண்டு போகாதே. இங்கே வா. ஒரு பேச்சுக் கேள்? என்று கூப்பிட்டது.

கழுதை திரும்பி வந்தது.

குயில் கேட்கிறது - "அந்த மாணிக்கஞ் செட்டிக் கதையை எடுத்தாயே, அதை முழுதும் சொல்லவேண்டாமா?"

கழுதை - "உனக்குத் தெரியவேண்டிய அளவு சொல்லியாய் விட்டது. மிச்சம் உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை? என்றது.

குயில் - "பாதிக் கதையிலே நிறுத்தினால் அடுத்த ஜன்மம் பேயாகப் பிறப்பாய். சங்கீதம் இதைவிட இன்னும் துர்லபமாகப் போய்விடும்? என்றது.

அப்போது கழுதை பயந்து போய், "பாதிக் கதையிலே நிறுத்தினால் பேய்ப் பிறவியா? உண்மைதானா?" என்று கேட்டது. கழுதைக்கு மறு ஜன்ம நம்பிக்கை மிகவும் தீவிரம்.

குயில் சொல்லிற்று - "ஆமாம். உண்மைதான். எங்கள் தாத்தா சொன்னார்.?

குயிலுடைய தாத்தா சொன்னால் உண்மையாகத்தான் இருக்குமென்று கழுதைக்குச் சரியான நம்பிக்கை ஏற்பட்டது.

"அப்படியானால் கதை முழுதையும் சொல்லி விடலாமா?" என்று கழுதை கேட்டது.

"சொல்லு. அதற்கு நடுவிலே நான் ஒரு சின்னக் கதை சொல்லி முடித்துவிடுகிறேன்.?