துகண்டிகை என்ற குயில் சொல்லுகிறது:- பழைய காலத்திலே, வஞ்சி நகரத்தில், ஒரு தோட்டத்து வேலியிலே, ஒரு பாம்பு தனது பெண் குட்டியுடன் வாசம் செய்தது. அந்தக் குட்டி மிகவும் அழகாக இருந்ததனால் அதற்கு "ரோஜாப்பூ? என்று பெயர். ஒருநாள் இரவிலே தாய்ப்பாம்பும், குட்டியும் புதரிலிருந்து வெளிப்பட்டுக் காற்று வாங்கிக்கொண்டிருக்கையில், குட்டி தாயை நோக்கிக் கேட்கிறது:- "அம்மா! நம்மை எல்லாரும் ஏன் பகைக்கிறார்கள்? நம்மை வீதியிலே எந்த மனிதன் கண்டாலும் கல்லால் எறிகிறானே, காரணமென்ன?" தாய் சொல்லுகிறது:- "குழந்தாய், நமது ஜாதிக்குப் பல்லிலே விஷம். நாம் யாரையேனும் கடித்தால் உடனே இறந்துபோய் விடுவார்கள். இதனால் நம்மிடத்திலே எல்லாருக்கும் பய முண்டாகிறது. பயத்திலிருந்து பகையேற்படும். அதுதான் காரணம்.? இங்ஙனம் தாய்ப் பாம்பும் குட்டியும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் பக்கத்திலே ஒரு முனிவர் நடந்து சென்றார். அவர் இந்தப் பாம்புகளைப் பார்த்துப் பயப்படவில்லை. ஒதுங்கவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவர் பாட்டிலே போனார். இதைப் பார்த்து ரோஜாப் பூ மிகவும் ஆச்சரியப்பட்டுத் தனது தாயிடம் கேட்கிறது:- |