ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம்செய்து கொள்ளலாம். விவாகம் செய்துகொண்ட புருஷனுக்குஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்குஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும்போலே. விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும்சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாகக் கதை சொல்லும்பொய்ப் புராணங்களிலே லக்ஷ்மியை அடித்தாரென்றாவது,சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்றாவதுகதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாக"தரித்துக்கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினார்.பிரம்மா நாக்குக் குள்ளேயே மனவியைத் தாங்கி நின்றார்.ஜத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் எனஇரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூர்ணமானசமானம். பெண்ணே அணுவளவு உயர்வாகக் கூறுதலும்பொருந்தும். எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாதுபூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணைமேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும்தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்;அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம். இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின்மனதிலே பட்டு, பெண் விடுதலைக் கக்ஷி தமிழ் நாட்டின் கண்ணேபலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாதமகிழ்ச்சி யுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ் நாடுபூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பதில்ஆக்ஷேபமேயில்லை. அடுத்த விஷயம் மத பேதங்களைக் குறித்தது. இதில்பாரத தேசம் - முக்கியமாகத் தமிழ்நாடு - இன்று புதிதாக அன்று,நெடுங்காலமாக தலைமையொளி வீசிவருதல் எல்லோருக்கும்தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ் நாட்டில் பிறந்தவர் அன்றோ? "ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ்நாட்டிலன்றோ? பறையனைக் கடவுளுக்கு நிகரான நாயனாராக்கிக்கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்றோ ? சிதம்பரம்கோயிலுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சந்நதி, பெருமாளுக்கொருசந்நதி. ஸ்ரீீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணைத்தேவியாக்கித் துலுக்கநாச்சியார் என்று பெயர் கூறிவணங்குகிறார்கள். 'எம்மதமும் சம்மதம்' என்றார் ராமலிங்கஸ்வாமி. உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன்களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்டவேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம். உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத்தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போதுதமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியேபூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம். மேலே சொன்னபடி, ''பரிபூரண ஸமத்வம் இல்லாதஇடத்தில் நாம் ஆண் மக்களுடன் வாழமாட்டோம்'' என்றுசொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும் புருஷசமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோ யாயினும்,எத்தன்மையுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே!ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்துக்காக இறப்போரும்இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால், சகோதரிகளே! பெண்விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம்வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள்.வந்தே மாதரம். |