ஸஹோதரிகளே! நீங்கள் ஐரோப்பிய நாகரீகத்தின்சேர்க்கையைக் குறித்துச் சிறிதேனும் வருத்தப்படவேண்டாம்.அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும்வலிமையுடையதன்று. அது நமக்குத் துணை. அது நாம்அஞ்சுவதற்குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்டஇரண்டு நாகரீகங்கள் வந்து கூடும்போது அவற்றுள் ஒன்றுமிகவும் வலியதாகவும் மற்றொன்று மிகவும் பலவீனமாகவும்இருக்குமாயின், வலியது வலிமையற்றதை இருந்த இடம்தெரியாமல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரீகத்துக்குரியபாஷையும் மதமும் முக்கியத் தன்மையற்ற புற ஆசாரங்கள்மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய"ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரீகத்தைக்காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரீகஸ்தரின் பாஷை,மதம் முதலியவற்றைக் கைக்கொள்ளுகிறார்கள். பிலிப்பைன்தீவில் அமெரிக்க நாகரீகம் இவ்வகை வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய ஹிந்துநாகரீகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிறநாகரீகங்களுடன் கலப்பதனால் இதற்குச் சேதம் நேருமென்றுநாம் சிறிதேனும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.உலகத்திலுள்ள நாகரீகங்கள் எல்லாவற்றிலும் நம்முடையநாகரீகம் அதிகசக்தியுடையது. இது மற்றெந்த நாகரீகத்தையும்விழுங்கி ஜீர்ணித்துக்கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால்,ஐரோப்பிய நாகரீகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன்உண்மையியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக்காட்டிலும் அதிக சக்தியும் ஒளியும் பெற்று விளங்குகிறது.இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்துகொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம்நன்கு நடைபெறாது. தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! உங்களிடம்எத்தனையோ அரிய திறமைகளும், தந்திரங்களும் உயர்ந்துஇருந்த போதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்லாதபடியால் அவ்வப்போது வெளியுலகத்தில் நிகழும்"செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டுஅதற்குத் தக்கபடி நடக்க இடமில்லாமற் போகிறது.''ஸ்வதர்மத்தைக் காப்பாற்றுவதில் இறந்து விட்டாலும்பெரிதில்லை'' என்று கிருஷ்ணபகவான் பகவத்கீதையில்சொல்லுகிறார். ஆனால், இங்ஙனம் உயிரினும் அருமையாகப்போற்றுதற்குரிய கடமைகள் அல்லது தர்மங்களுக்கும் அர்த்தமற்றனவும் ஸத்தில்லாதனவுமாகிய வெற்று வழக்கங்களுக்கும்பேதமறியாமல் நீங்கள் மருட்சி கொண்டு வீணேதுயரப்படலாகாது. திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டு மாதருக்குமட்டுமேயன்றி உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக்கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீஎவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும். ஆனால் குழந்தைப்பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத்தொங்கவிட்டுத் தோள்வரையிலும், சில சமயங்களில் மார்புவரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது.நம்முள்ளே புதிதாக இங்கிலீஷ் படித்துத் தேறியவர்களில்பலர் தம்முடைய மனைவியர் ஏற்கெனவே நீளமாகவும்விகாரமாகவும் வளர்த்திருக்கும் செவிகளை மறுபடி சுருக்கித்தைத்துத் தோடு போட்டுக் கொள்ளும்படி செய்யவிரும்புகிறார்கள். தமக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கேனும் அங்ஙனம் காது வளர்க்காமலிருக்க"வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இதற்காக பல ஸ்திரீகள்புருஷருடன் முரண்பட்டு வீட்டில் தீராத மனஸ்தாபமும்சண்டை சச்சரவுகளும் நிகழும்படி நற்கிறார்கள். கற்புஎங்ஙனம் ஸ்வதர்மமோ அதுபோலவே காது வளர்ப்பதும்ஸ்வதர்மமென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலேநினைக்கிறார்கள். மாதரிடையே கல்வி பரவுமாயின்,இவ்விதமான தப்பெண்ணங்கள் தாமே விலகிப்போய் விடும்.குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும்ஜாதிவழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்றஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்படவேண்டுமாயின்,அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை.ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப்பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவேநடத்துவார்கள். தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார்,உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக்காட்டிலும் இறந்து விடுதல் நன்று. |