"இதர ஜீவ ஜந்துக்களின்மீது கருணை செலுத்து முன்னே, மனிதர் ஒருவருக்கொருவர் கருணை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்தால் நல்லது. போர்களில் மனிதர் ஒருவரை யொருவர் கொல்லவில்லையா? ஆட்டை மாட்டைக் கொன்றாலும் தின்ன உபயோகப்படுகிறது. மனிதரை மனிதர் தின்னும் வழக்கம் சிற்சில தீவினருக்குள்ளே காணப்படுகிறதெனினும், நம்மைப் போன்ற நாகரீக ஜாதியார்களுக்குள்ளே அவ்வித வழக்கமில்லை. மனிதரை மனிதர் தின்னப் பயன்படாவிடினும் அநாவசியமாகக் கொன்று தள்ளுகிறார்கள். மேலும் பிற உயிர்களை அடிமைப்படுத்தும் வழக்கம் மிருகங்களுக்கில்லை. சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. ஒரு நாய், ஒரு கழுதை, ஒரு நரி, ஒரு பன்றி கூடச் சிங்கத்தின் கீழே அடிமையில்லை. முயல்கூடக் கிடையாது. மிருகங்களும் பக்ஷிகளும் பிற ஜாதி மிருக பக்ஷிகளை "அடிமைப்படுத்துவதில்லை; ஸ்வஜாதிகளையும் அடிமையாக்குவதில்லை .மனிதரோ, ஆடு, மாடு, குதிரை, கழுதை, ஒட்டகை, யானை முதலியஅன்னிய ஜாதி ஜந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது மட்டுமேயல்லாது, பிற மனிதர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப் போல் பாவம் வேறேதேனுமுண்டோ? பிற உயிரொன்றை ஆயுள் முழுவதும் தன் கீழே வைத்துச் சிறிது சிறிதாக மனமுடையச் செய்து அடிமை நிலையிலே வருந்தி வருந்தி வாணாள் தொலைக்கும்படி செய்வதைக் காட்டிலும் ஒரேயடியாக அவற்றைக் கொன்று விடுதல் எத்தனையோ மடங்கு சிறந்ததன்றோ? மனிதர் கீழே மனிதர் இருப்பதைக் காட்டிலும் சாதல் சிறந்தது." "ஆணுக்காண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகமிகப் பெரிது" என்று சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் சொன்னான். "ஆணுக்காணும், ஆணுக்குப் பெண்ணும் அடிமைப்படாதிருத்தல் ஸாத்யமென்று தோன்றவில்லை" என்று ராஜா கங்கா புத்திரன் சொன்னான். "எங்ஙனம்?" என்று காசி மந்திரி ஸுதாமன் கேட்டான். "ஆண்களில் பெரும்பாலோர் செல்வமில்லாதவர்கள், சிலர் செல்வ முடையவர்கள். ஆதலால் செல்வமுடைய சிலருக்கு அஃதில்லாத பலர் அடிமைப்படுதல் அவசியம்" என்று ராஜா சொன்னான். "பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?" என்று சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் கேட்டான். அதற்கு ராஜா கங்கா புத்ரன் சொல்லுகிறான்:- "பெண் சரீர பலத்தில், ஆணைக்காட்டிலும் குறைந்தவள். அவளாலே ஸ்வாதீனமாக வாழ முடியாது. தனிவழி நடக்கையிலே துஷ்டர் வந்து கொடுமை செய்தால், தன்னைக் காத்துக்கொள்ள வலியில்லாதவள். குழந்தை ஸம்ரக்ஷணம் முதலியஅவசியங்களாலே, உழுது பயிரிட்டுத் தொழில் புரிந்து ஜீவனம் செய்வதில் இயற்கையிலேயே பெண்ணுக்குப் பல தடைகள் ஏற்படுகின்றன. அப்போது அவள் ஆஹார நிமித்தமாக ஆணைச் சார்ந்து நிற்றல் அவசியமாகிறது. பிறன் கைச்சோற்றை எதிர்ப்பார்த்தால் அவனுக்கடிமைப் படாமல் தீருமா?" என்றான். அப்போதுகாசிமந்திரியாகிய ஸூதாமன் சொல்லுகிறான்: |