"பெண்கள் உழவு முதலிய தொழில் அனைத்திலும் ஆண் மக்களுக்கு ஸமானமான திறமை காட்டுகிறார்கள். மேலும், அவர்களுக்கு ஆண்மக்கள் ஸம்பாத்தியம் பண்ணிப் போடாமல், அவர்கள் ஸம்பாதித்து ஆண்மக்களுக்குச் சோறுபோடும் நாடுகளிலேகூட, ஆண் மக்கள் பெண்களை அடிமை நிலையிலே தான் வைத்திருக்கிறார்கள். சரீர பலத்தில் ஸ்திரீகள் ஆண்களைவிட இயற்கையிலே குறைந்தவர்கள் என்பது மாத்திரம் மெய். இது மனிதருக்குள் மட்டுமன்று; எல்லா ஜந்துக்களுள்ளும் அப்படியே. ஆண் சிங்கத்தைக் காட்டிலும் பெண் சிங்கம் பலங் குறைந்தது; வடிவில் சிறியது. காளை மாட்டைக் காட்டிலும் பசு மாடு பலங்குறைந்தது, வடிவத்திலே சிறியது. ஆண் நாயைக் காட்டிலும் "பெண் நாய் பலங்குறைந்தது. சேவலைக் காட்டிலும் கோழி சிறிது. ஆண் குருவியைக் காட்டிலும் பெண் குருவி சிறிது. ஆநேகமாக எல்லா ஜந்துக்களின் விஷயத்திலும் இதுவே விதி. இக்காரணம் பற்றியே மிருகங்கள், பக்ஷிகள், மனிதர், பூச்சிகள் முதலிய ஸகல ஜந்துக்களிலும் பெண்ணை ஆண் தாழ்வாக நடத்தும் வழக்கமிருக்கிறது. மனிதன் நாகரீக ஜந்துவாதலால் மற்றைய ஜந்துக்களைப் போல் அத் தாழ்வு நிலையைப் புறக்கணித்து விடாமல், அதை சாசுவதமாக்கி, சாஸ்த்ர மேற்படுத்தி வைத்திருக்கிறான். மனித ஜாதியில் ஆணுக்குப் பெண் அடிமைப் பட்டிருப்பதுபோல் இதர ஜந்துக்களுக்குள்ளே கிடையாது. மனிதரிலே கொடுமை அதிகம். இதற்கெல்லாம் ஆதி காரணம் ஒன்றே. பலங் குறைந்த உயிரைப் பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்ற விதி ஸகல பிராணிகளினிடையேயுங் காணப்படுகிறது. மனிதர் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள்" என்றான். அப்போது ராஜா கங்கா புத்ரன் ஸூதாமனை நோக்கி:- "ஒரு ஸ்திரீயைப் புருஷன் அடிமையாக நடத்துவதும் மானைப் புலி தின்பதும், ஆட்டை மனிதன் தின்பதும், பள்ளனை அரசன் சொற்பக் கோபத்தால் சிரச்சேதம் செய்வதும் இவை அத்தனைக்கும் ஒரே பேர் என்று சொல்லுகிறாயா?" "என்றான். அதற்கு ஸூதாமன்:- "ஆம் ஜந்துக்கள் பரஸ்பரம் துன்பப் படுத்தாமல் தடுப்பது நமக்கு ஸாத்யமில்லை. நாட்டிலுள்ள காக்கை குருவிகளை ஒரு வேளை திருத்தினாலும் திருத்தலாம். வனத்திலுள்ள துஷ்ட மிருகங்களையும் கோடானு கோடி ஜந்துக்களையும் மண்ணுக்குள் பூச்சி புழுக்களையும் கடலில் மீன்களையும் திருத்த மனிதனால் ஆகாது. மேலும், சிங்கம் புலிக்கு வாழைப்பழங்களும், மீன் புழுக்களுக்கெல்லாம் கீரையும், பூச்சி புழுக்களத்தனைக்கும் அரிசியும் தயார் பண்ணிக்கொடுக்க மனிதனால் முடியுமா? அதாவது ஒரு வேளை அவை எல்லாம் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்திவிடுவதாக ஒப்புக்கொண்ட போதிலும் நாம் அவற்றை சாகபக்ஷணிகள் ஆக்க வழியில்லை. ஆனால் மனிதருக்குள்ளே பரஸ்பரம் அடிமைப் படுத்தாமலும் முக்கியமாக ஆண், பெண்ணை அடிமைப்படுத்தாமலும் மனிதர் ஸமத்வமாகவும் நியாயமாகவும் வாழ வழியுண்டு" என்றான். |