"சரி, நான் தீர்மானம் செய்துவிட்டேன். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இன்றைக்கிருப்பவர் நாளைக்கிருப்பார்களென்று நிச்சயமாகச் சொல்ல இடமில்லை.எனக்கு முன் கோடானு கோடி அரசர் உலகத்திலே பிறந்து மாண்டு போயினர். மனு, மாந்தாதா, தசரத ராமாதிகளெல்லாம் மண்ணிலே கலந்து விட்டனர்; என் காலத்தில் ஒரு புதிய தர்மம் நிலைப்படும்படி செய்கிறேன். மந்திரி ராஜகோவிந்தா, கேள்! நம்முடைய ப்ரஜைகள் எத்தனை பேர்? மொத்தம் 2 லக்ஷம்பேர். சரி இங்கு விளைகிற நெல், புல், கிழங்கு, காய், கனி, ஒன்றும்வெளியே போகக்கூடாது. பதினெட்டு வயதுக்குமேல் அறுபது வயது வரையுள்ள எல்லாரும் உழுதல், பயிரிடுதல், தோட்டஞ் செய்தல், துணிநெய்தல், மனை கட்டுதல், ஊர்துடைத்தல் முதலியஅவசியமான தொழில்களிலே ஸமமான பாகம் எடுத்துக் கொள்ளவேண்டும். வீடு விளக்கலும், குழந்தை வளர்த்தலும்,சோறாக்கலும் பெண்களுடைய தொழிலாதலால், அவர்கள்பயிர்த்தொழில் முதலியவற்றிலே துணை புரிதல் வேண்டாம்.சரி. மொத்த விளைவை இந்த இரண்டு லக்ஷம் ப்ரஜைகளும் ஸமமாகப் பகுத்துக் கொள்வோம். எனக்கும் என் பத்தினிக்கும் என் குழந்தைகளுக்கும் - எத்தனை தானியம், எத்தனை கனி, "எத்தனை கிழங்குண்டோ அப்படியே ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் ஸமபாகமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிட ஏற்பாடு செய்வோம். பெண்களை அடிமைப்படுத்தவும் வேண்டாம். காசிராஜன் பெரிய தாயாராகிய சண்டிகையை அவள் கொண்டு வந்த வரிசைகளுடன் ஒற்றைக் கிரட்டையாக வரிசை கொடுத்து பரிவாரங்களுடன் அடுத்த கப்பலில் பாரத தேசத்துக்கனுப்பி விடுவோம். நமது மகள் சந்திரிகையின் இஷ்டப்படி அவளை ஸூதாமனுக்கே மணம் புரிந்து கொடுத்துவிடுவோம். நீ என்ன சொல்லுகிறாய்? ஸூதாமா, இங்கேயே இருப்பாயா? காசிக்குப் போனால் நான் உன்னுடன் என் மகளை அனுப்ப முடியாது" என்றான். அதற்கு ஸூதாமன்:- "நான் இங்கேயே இருக்கிறேன். பயமில்லை. விஷயத்தை யெல்லாம் தெளிவாகச் சொல்லியனுப்பினால் காசி ராஜா கோபம் கொள்ளமாட்டார். என்னுடைய தம்பியை அவருக்கு மந்திரியாக நியமித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விடுகிறேன். நான் இங்கே இருப்பேன்; இந்தத் தீவும் அழகியது. இதிலுள்ள ஜனங்களும் நல்லவர்கள். இதன் அரசனாகிய நீயும் நல்லவன், நின் மகளோ என் நெஞ்சில் தெய்வம். ஆதலால் இங்கிருப்பேன்" என்றான். விவாகம்நடந்தது. அங்கு மன்னனும் குடிகளும் அண்ணன் தம்பிகள்போல - யாருக்கும் பசியில்லாமல், யாருக்கும் நோவில்லாமல், யாருக்கும் வறுமையில்லாமல், யாருக்கும் பகையில்லாமல் - எவ்விதமான துன்பமுமில்லாமல், ஸூதாமன், ராஜகோவிந்தன் என்ற இரண்டு மந்திரிகளுடன் கங்காபுத்ர ராஜன் நெடுங்காலம் ஸுகத்துடன் வாழ்ந்தான். |