பக்கம் எண் :

கலைகள் -  நெல்லிக்காய்க் கதை

நான் சிறு குழந்தையாக இருக்கும்போது, 'ஹிந்துக்களைப்போலே ஒற்றுமைக் குறைவான கூட்டத்தார் உலகத்தில் வேறெந்த தேசத்திலும் இல்லை' யென்றும் 'ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டைக்குச் சமான' மென்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு, உலகத்திலுள்ள வேறு பல தேசங்களின் பூர்வ சரித்திரத்தையும் தற்கால " இயல்பையும், பல விதங்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மேற்படி வார்த்தை தவறு என்று தெரிந்தது. கிழக்கே, மேற்கே, தெற்கே,  வடக்கே, உலகத்திலுள்ள எந்த ராஜ்யத்தைப் பார்த்த போதிலும் அங்கு பணமும் அதிகாரமும் இருக்கும்வரை, மனிதர் பரஸ்பரவிரோதங்களையும் பொறாமைகளையும் உள்ளே அடக்கிவைத்துக் கொண்டு ஒரு விதமான வெளி யொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள். இருந்தாலும், நாலடியாரில் சொல்லியபடி

"அட்டுற யார்மாட்டும் நில்லாது    செல்வம் சகடக்கால் போலவரும்."

லக்ஷ்மீதேவி எந்த இடத்திலும், ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும் அதனாலுண்டான பெருமையும், ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவு படும்போது, உட்பொறாமையும் மாற்சரியமும் வெளிப்பட்டு தலைதூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.