பக்கம் எண் :

கலைகள் -  இந்துக்களின் சிறப்பு

ஆனால், இவ்விஷயத்திலே கூட, மற்ற தேசத்தாரைக் காட்டிலும் ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகின்றது, ஏனென்றால் ஹிந்துக்களிடம் தெய்வபக்திஎன்ற சிறந்த குணம், மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகமென்பதை மேற்குப் பக்கத்துப் பண்டிதரிலே கூடப் பக்ஷபாதமற்ற பல யோக்கியர் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வபக்தியினால் ஜீவதயை உண்டாகிறது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே       யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"

என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார்.

சென்ற கார்த்திகை மாதம், புயற்காற்றடிப்பதைப் பற்றி தென்னாற்காடு ஜில்லாவைச் சோதனை செய்த ஸர்க்கார் அதிகாரியான ஓர் ஆங்கிலலேயர் தம்முடைய அறிக்கையில், ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதயை, அதித ஸத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்த இரவில் சில வைதிக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடங்கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப் போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் "எம்பெருமான் கடைக்குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத்தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.

     சந்திரனில் ஒரு களங்கம் -     ஆனால் தீர்க்கக் கூடியது.

சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பதுபோல், இப்போது நம்முடைய கூட்டத்தில் ஒரு களங்கமிருக்கிறது. ஆனால் பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக்கொள்ளாது. ஞான சூரியராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாகநீக்கி வருகிறார்கள், அந்தக் களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பி எல்லோரும் இன்புறவேண்டி குணகர்மங்களால் வர்ண நிச்சயம் செய்து கொண்டு,பூமண்டலத்துக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லோரும் ஹிந்துக்களை கை தூக்கிவிடப் புறப்பட்டிருக்கிறார்கள். பரமாத்மா ஒன்று. அவனுக்கு ரிஷிகள் பல பெயர் சொல்லிப் போற்றுகிறார்களென்று வேதம் சொல்லுகிறது.

      "பேரனந்தம் பேசி மறையனந்தஞ் சொலும்       பெரிய மௌனத்தின் வைப்பு"

என்று தாயுமானவர் காட்டினார். ராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றி விட்டது. எனவே, கலி நீங்கிவிட்டது.