பக்கம் எண் :

கலைகள் - மலையாளத்துக் கதை

'மனோரமா' என்று அங்கே (மலையாளத்தில்) ஒரு பத்திரிகை இருக்கிறது. அதில் போன வருஷம் ஒரு நம்பூரி தனது ஜாதி ஸ்திரீகளின் அறியாமையைப்பற்றி ஒரு வேடிக்கையான கதை எழுதினார். அந்த நம்பூரி வீட்டில் அவருடைய பந்துக்களில் ஒரு ஸ்திரீ இந்து தேச சரித்திர விஷயமாகப் பேசுகையிலேகும்பினி (ஈஸ்டு இந்தியா கம்பெனி) என்றொரு ராணி யிருந்ததாகவும் மேற்படி கும்பினியின் தங்கை பெயர் இந்தியா என்றும் சொன்னாளாம்.

"நம்பூரிகளுக்குள்ளே இப்போதுதான் ஸபை கூடி ''இங்கிலீஷ் படித்தால் ஜாதிபிரஷ்டம் பண்ண வேண்டுமா வேண்டாமா'' என்று ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனை இன்னும் முடிவு பெறவில்லை. ''ஜன்மி''கள் (நம்பூரி ஜமீன்தார்கள்) இப்போது ஏழைகளாய் வருகிறார்கள். அவர்களுடைய செல்வம் குறைகிறது. அவர்களுக்கு நோயும் மரணமும் மிகுதிப்படுகின்றன" என்றார்.

அப்போது நான் சொன்னேன்:-  "உண்மையாகவே இந்த நம்பூரி உயர்ந்த குலம். காலத்தின் குறிப்பையறியாமல் தாழ்ச்சியடைகிறான் போலும்? என்றேன்.

ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:-  "நம்பூரிகளுக்குள்ளே எழுதப் படிக்கத் தெரியாத சிலர் கவிதை செய்கிறார்கள். திருஷ்டாந்தமாக காஞ்ஞோனி இல்லம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. கவிதை, ராஜாக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கும்படி செய்கிறார்கள். மலையாளத்தில் கவிதைக் காற்று வீசுகிறது.

"நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் என்பது ஒரு வகை மணம். முண்டு (வேஷ்டி) கொடுப்பதே சடங்கு. நாயர்களுடனும் பிராமணருடனும் நாயகர்களில் ராஜகுடும்பத்தார் முதல் ஏழைகள்வரை எல்லாரும் இஷ்டப்படி ஸம்பந்தஞ் செய்து கொள்ளலாம். ஒரு ஸ்திரீ தன் இஷ்டப்படி ஸம்பந்தங்களை நீக்கலாம், மாற்றலாம், சட்டம் தடுக்காது. பிள்ளைக்குத் தகப்பன் பெயர் கிடையாது. தாயின் பெயரை மாத்திரந்தான் நியாயஸ்தர் விசாரணையிலே கூடக் கேட்பார்கள்" என்றார்.

"நல்லது, புதிய தீயருக்கும், நாயருக்கும், நம்பூரிகளுக்கும் ஒற்றுமையும், அன்பும், அறிவும் பகவதி சேர்த்திடுக" என்றேன்.

இந்த சமயத்தில் "பாப்பா" (பாப்பா - ஸ்ரீ பாரதியாரின் இளைய குமாரி.) வந்து "பகவதிப் பாட்டு பாடட்டுமா?" என்றுகேட்டது. "பாடு பாடு" என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.

ஆ  ஆ  ஆ  !

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்; - அவை    நேரே இன்றெனக்குத் தருவாய்; - என்றன்    முன்னைத் தீயவினைப் பயன்கள்; - இன்னும்    மூளாதழிந்திடுதல் வேண்டும்; - இனி    என்னைப் புதிய உயிராக்கி; - எனக்    கேதும் கவலை யறச்செய்து; - என்றும்    சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! ஹே!    காளீ, வலிய சாமுண்டீ! - ஓங்    காரத் தலைவி யென் னிராணீ!