பக்கம் எண் :

கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை

இன்று காலை பொழுது விடிய இரண்டு நாழிகைக்கு ஒருவர் வந்து என் வீட்டுக்கதவை இடித்தார். நான் போய்க் கதவைத் திறந்து பார்த்தேன் கையில் ஒரு லாந்தர் வைத்துக் கொண்டிருந்தார். நெற்றியிலே ஸ்ரீ சூர்ணம், தலையில் பாகை; உடம்பில் முழந்தாள் வரை நீண்ட பெரிய கர்நாடக உடுப்பு; காலில் பாதக் குறடு; கையில் தும்பிக்கை போலே ஒரு தடி. "யார்?  எந்த ஊர்?"  என்று கேட்டேன்.

அப்போது அவர் சொல்லுகிறார்;-  "நான் வசிப்பது கும்பகோணம் என் பெயர் டிண்டிம சாஸ்திரி. வேதபுரத்தில் ஸ்வாமி தெரிசனத்துக்காக வந்தேன். தங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நெடுநாளாக இருந்த ஆசையை "இப்போது தீர்த்துக் கொண்டேன்" என்றார்.

''சரி'' என்று சொல்லி நான் அவரை உள்ளே அழைத்து வந்தேன். மேல் மெத்தையில் குழந்தை குட்டிகள் தூங்கிக்கொண்டிருந்தபடியால். கீழேயே கூடத்தில் ஒரு பிரப்பம்பாயை விரித்தேன். விளக்கேற்றினேன். டிண்டிமரும் நானும் உட்கார்ந்து கொண்டோம். டிண்டிம சாஸ்திரி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியை எடுத்தார். நானும் அவரும் வெற்றிலை போட்டுக் கொண்டோம். அப்போது டிண்டிமர்:- "தாங்கள் பிரஹ்மபத்ரம் (புகையிலை) போடுவது கிடையாதோ?" என்றார்.

நான் சொன்னேன்:-  'கிடையாது, ஸ்வாமி; முன்னெல்லாம் நாளொன்றுக்கு மூன்று தூக்குப் புகையிலை சவைத்துத் துப்பிக்கொண்டிருந்தேன். இரண்டு வருஷகாலமாக அவ்வழக்கத்தை நிறுத்தி விட்டேன்" என்றேன்.

"சரிதான்" என்று சொல்லி லேசாக நகைத்து விட்டு, டிண்டிம சாஸ்திரி தம்மிடமிருந்த புகையிலை டப்பாவைத் திறந்து அதற்குள்ளிருந்த சுகந்தபரிமள புகையிலையை ஒரு கொத்து, எலுமிச்சங்காய் அளவு, கையில் எடுத்து வாய்க்குள்ளே திணிக்கக் மாட்டாமல் திணித்துக் கொண்டார்.