பக்கம் எண் :

கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை

இரண்டுதரம் எழுந்து வெளியே எச்சில் துப்பிவிட்டு வந்தார். மேலே இருந்த பட்டையையும் தலையில் இருந்த பாகையையும் கழற்றிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்: "முந்தி ஒரு தடவை 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் மலையாளத்திலிருந்து தீய ஜாதியைச் சார்ந்த 'ராகவ சாஸ்திரி, என்ற மனுஷ்யன் வந்ததாகவும், அவர் மலையாளத்து நம்பூரிப்பிராமணர்களைத்தூஷித்துப் பேசியதாகவும் தாங்கள் எழுதியிருந்தீர்கள். நான் அதற்கப்புறம் மலையாளத்துக்குப் போய் பல நம்பூரிப் பிராமணர்களைக் கண்டேன். அவர்களெல்லோரும் மஹா யோக்கியர்கள். "தீயர்களைக் கஷ்டப்படுத்துகிற நாயர்களைக் கஷ்டப்படுத்தினார்களே யென்றாலோ, அதுவெல்லாம் பழைய கர்மம். அதனால் உண்டான பாவபயன்களை அவர்கள் அனுபவித்தார்கள்; இப்போதும் அனுபவிக்கிறார்கள். சந்திரனிலே கூட மாசு தோன்றுகிறது. அதுபோல், உலகத்திலும் எந்த ஜாதியாரிடத்திலும், குற்றம் கண்டு பிடிக்கப் போனால், குற்றம் இருக்கத்தான் செய்யும். ''குற்றம் பார்க்கில் சுற்றமில்லை'' என்று ஓளவையாரே சொல்லியிருக்கிறார்கள். மேற்படி ஓளவையாரைக் குறித்து நான் மலையாளத்தில் கேள்விப்பட்ட புதுமைகளைத் தங்களிடம் சொல்லவேண்டுமானால், அது வேறு பெரிய கதையாக நீளும். நம்பூரிப் பிராமணர்களை மொத்தமாகக் கவனிக்கும்போது நல்ல ஸாதுக்களாகவே யிருக்கிறார்கள். அவர்களுடைய யோக்கியதை இக்காலத்தில் சோபிக்க இடமில்லை. முதலாவது, அவர்களுக்கு நவீன லௌகீகக் (அதாவது ஐரோப்பியக்) கல்வியில்லை. அது ஓர் ஊனம். ஆனால், அதை அவர்கள் சீக்கிரத்தில் நிவிர்த்தி செய்து கொள்வார்கள்.

ஒரு நம்பூரி என்னிடம் சொன்னார்:-  "இங்கிலீஷ் பாஷையிலுள்ள சாஸ்திரங்களைத் தெரிந்து கொள்வதில் அவர்களுடைய வைதீக நெறிக்கு யாதொரு விரோதம் கிடையாதென்றும், ஆனால், இங்கிலீஷ் பாஷையைப் படித்தால் தான் தோஷமென்றும், ஆதலால் இங்கிலீஷிலிருந்து மேற்படி சாஸ்திரங்களை யாராவது தர்ஜமா பண்ணி போட்டால் "நம்பூரிமார் வாசிப்பதும் அல்லாமல் மேற்படி சாஸ்திரங்களில் அதுல்யமாகபாண்டித்யம் பெறுவார்கள் என்றும், நம்பூரியின் புத்திக்கு ஸமானமான தீக்ஷ்ணம் இந்த லோகத்தில் வேறு எந்த ஜாதியாருக்கும் கிடையாது என்றும் அந்த நம்பூரி சொன்னார்."

இங்ஙனம் டிண்டிம சாஸ்திரி கதை சொல்லி வருகையில் நான் இவரிடம்:- "ஸ்வாமி, தாங்கள் என்ன ஸ்மார்த்தரா வைஷ்ணவரா, விஷயம் தெரியவில்லையே. நெற்றியில் நாமம் இல்லை; ஸ்ரீசூர்ணம் மாத்திரம் தெரிகிறது. வைஷ்ணவர் சாஸ்திரி என்று பெயர் வைத்துக்கொள்வதில்லையே" என்றேன்.

அதற்கு டிண்டிம சாஸ்திரி:- "நான் ஸ்மார்த்தன் தான். கீற்று நாமக்காரன். நாங்கள் லேசாக நாமம் போடுவோம். நேற்று மத்தியானம் சார்த்தினபடியாலே திருமண்கலைந்துபோய் ஸ்ரீசூர்ணம் மாத்திரம் தெரிகிறது. ஸ்ரீரங்கத்துக் கோயிலில், ஸ்மார்த்தர் நாமம் போட்டுக்கொண்டு பரிசாரகம் செய்கிறார்கள். அனேக ஜில்லாக்களில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.