"திப்பு சுல்தான் கோழிக்கூட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முஸ்லீம் ஆக்கிகோமாம்சம் புசிக்கச் செய்தானானாம். அவனை எதிர்க்கத் திறமையில்லாமையால் கோட்டயம் ராஜாவும் கூத்தாட்டு ராஜாவும்இங்கிலீஷ்காரருக்கு விண்ணப்பஞ் செய்தார்கள்: - "நீங்கள் பிராமணர்களையும் ஏழைகளையும் ராஜ்ய முழுவதையும் காப்பாற்ற வேண்டும்" என்று. இங்ஙனம் மேற்படி டிண்டிம சாஸ்திரி எத்தனையோ விதமான கதைகள் சொன்னார். அவர் சொன்ன விஷயங்களை யெல்லாம் பின்னிட்டு "நம்பூரிமார்" என்றுதனிக்கதை எழுதுவேன். அதிலே சொல்லுகிறேன். இது நிற்க, காலை தோசை தின்று பால் சாப்பிட்டு விட்டுத் தாம்பூலம் தரித்துக்கொண்டு டிண்டிம சாஸ்திரி என்னிடம் விடைபெற்றுச் சென்றார். அவர் போய் பத்து நிமிஷத்துக்கெல்லாம் பழையராகவ சாஸ்திரி முன்போல ஐரோப்பிய உடை தரித்துக்கொண்டு வந்து ப்ரஸந்நமானார். அவர் யார் ஞாபகமிருக்கிறதா? ஆதியில் இந்த ராகவ சாஸ்திரி என்னிடம் வந்து நம்பூரியைப் பழித்துப் பேச அதை நான் சுதேசமித்திரன் பத்திரிகைக் கெழுத, அதைப் பார்த்துத் தான் டிண்டிம சாஸ்திரி என்னை உணர்ந்து வந்தார். ராகவசாஸ்திரி வந்தவுடன் நான் அவரிடம் டிண்டிமர் வந்துவிட்டுப்போன விருத்தாந்தங்களையெல்லாம் சொன்னேன். அப்போது ராகவ சாஸ்திரி கடகடவென்று சிரித்தார். இவர் கையில் "ரயில் பை" கொண்டு வந்திருத்தார். அதை எடுத்துக்கொண்டு "நான் மெத்தையிலே போய்த் தனியாக ஐந்து நிமிஷம் இருக்கவேண்டும்" என்று சொன்னார். "அதற்கு என்ன, செய்யும்" என்றேன். தனியாகப் போயிருந்தார். திரும்பி வரும் போது பார்த்தால் பூட்ஸ் எல்லாம் போய், ஸ்ரீசூர்ணம், தலைப்பாகை ஸஹிதமான டிண்டிமசாஸ்திரி வந்து தோன்றினார், ''இதென்னடா வேடிக்கை'' யென்று தீரவிசாரணை செய்யும்போது, ஒரே ஆசாமி ராகவ சாஸ்திரியாகவும் டிண்டிம சாஸ்திரியாகவும் இரண்டு வேடந் தரித்து எனக்கு நம்பூரிகளுடைய விஷயத்தில் கோபம் அதிகப்படும்படி செய்வதற்காக இப்படி விளையாடினார் என்று தெரியவந்தது.அவர் பிறப்பில் தீயரில்லை. நம்பூரிதான் என்றுந் தெரியவந்தது. |