பக்கம் எண் :

கலைகள் - கொட்டைய சாமி

தென் பாண்டி நாட்டில் நெட்டையபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. எந்தக் காரணத்தாலோ, அவ்வூர் ஜனங்கள் அக்கம் பக்கத்துக் கிராமத்தார்களைக் காட்டிலும் சராசரி முக்கால் அல்லது ஒரு சாண் அதிக உயரமாக இருப்பார்கள். இது பற்றியே நெட்டையபுரம் என்ற காரணப்பெயர் உண்டாயிற்றென்று பல பண்டிதர்சுகள் ஊகிக்கிறார்கள்.

அந்த ஊரில் மிகவும் கீர்த்தி யுடைய சிவன் கோயில் ஒன்றிருக்கிறது. ஆனித் திருவிழாவின் போது அக்கோயிலில் தேரோட்டம் மிகவும் அற்புதமாக நடக்கும்சூழ்ந்துள்ள கிராமங்களினின்றும் நாயக்கர்களும், நாய்க்கச்சிகளும், ரெட்டிகளும் ரெட்டிச்சிகளும், பறையர் பறைச்சிகளும் பெருங் கூட்டமாகத் தேர் சேவிக்கும் பொருட்டு வந்து கூடுவார்கள்.

கொண்டையெல்லாம் செவ்வந்திப் பூ, வீதியெல்லாம் கரும்பு சவைத்துத் துப்பிய சக்கை. அவர்களுடைய குழந்தைகள் ஆணும் பெண்ணும், பெரும்பகுதி நிர்வாணமாகவும், சிறு பகுதி இடுப்பில் மாத்திரம் ஒருசிறு துணியை வளைந்து கட்டிக்கொண்டும் வரும். துணி உடுத்திய குழந்தைகளுக்குள்ளே ஆண் பெண் வேற்றுமை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஏனென்றால், ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் முன் குடுமி சிரைக்கும் விநோதமான வழக்கம் அந்த ஜாதியார்களுக்குள்ளே காணப்படுகிறது.

மேற்படி நெட்டையப் புரத்தில் ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவருக்கு இப்போது சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும். செக்கச்செவேலென்று எலுமிச்சம்பழம் போலவே பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அவருடைய நடையுடை பாவனைகளிற் உடை மாத்திரம் இங்கிலீஷ்மாதிரி. நடையும் பாவனைகளும் முற்காலத்துப் பாளையக்காரரைப் போலேயாம். பூட்ஸ் முதல் தொப்பிவரை அம்மனிதருடைய உடுப்பைப் பார்த்தால் லண்டன் நகரத்து லார்டு மக்களின் அச்சு சரியாக இருக்கும். இவர் மூன்றுதரம் இங்கிலாந்துக்குப் போய் வந்திருக்கிறார். இங்கிலீஷ் பாஷை பேசினால், திக்காமலும் தட்டாமலும் சர சர சர வென்று மழை வீசுவது போல் வீசுவார். அவருக்குத் குதிரை யேற்றத்திலும் வேட்டையிலும் பிரியம் அதிகம். நானூறு வேட்டை நாய்கள் வளர்க்கிறார். இவருடைய அந்தப்புரத்தில் பன்னிரண்டு தாலி கட்டிய பெண்டாட்டிகளும் வேறு பல காதல் மகளிரும் இருக்கிறார்கள்.