இந்த ஜமீன்தார் சிவ பக்தியில் சிறந்தவர். விபூதி ருத்திராக்ஷங்களை மிகவும் ஏராளமாகத் தரிக்கிறார். தினம் இரண்டு வேளை அரண்மனையில் தானே சிவபூஜை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை தோறும் தவறாமல் மாலையில் சிவன் கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிவருகிறார். திருவிழாக் காலங்களில் முதலாவது வந்து நின்று முக்கால் வாசிப் பொழுதையும் கோயிலிலே செலவிடுவார். தேரோட்டத்தின்போது வடத்தை மற்ற ஜனங்களுடன் சேர்ந்து நெடுந்தூரம் இழுத்துக்கொண்டு போவார். அப்பால் கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு ஜனங்களை உற்சாகப்படுத்தின "படியாகவே, தேர் மீட்டும் நிலைக்கு வந்து நிற்க எவ்வளவுநேரமான போதிலும் கூடவே வருவார். கோயிலுக்கு வரும் ஸமயங்களில் மாத்திரம் இவர் ஐரோப்பிய உடையை மாற்றித் தமிழ் உடை தரித்துக் கொண்டு வருவார். பலாச் சுளைகளைப்போல் மஞ்சளாகக் கொழுக்குக் கொழுக் கென்ற உடம்பும் பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஒரு ஜரிகைப் பட்டுத் துண்டும், கை நிறைய வயிர மோதிரங்களும், தங்கப் பொடி டப்பியும், தங்கப்பூண் கட்டிய பிரம்புமாக இந்த ஜமீன்தார் சென்ற ஆனித் திருவிழாவின்போது, ஒரு நாட் காலையில், மேற்படி சிவன் கோயிலுக்கெதிரே, வெளிமண்டபத்தில் கல்யாண ஜமக்காளத்தின் மீது பட்டுத் தலையணைகளில் சாய்ந்து கொண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த வெள்ளிக்காளாம்பியில் சவைத்துத் துப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், மேற்படி ஜமீன்தாரின் முன்னே, கன்னங்கரேலென்ற நிறமும், மலர்போலத் திறந்த அழகிய இளைய முகமும், நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக, ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய இளைஞனொருவன் வந்து தோன்றினான். "இவன் பெயர் கொட்டைய நாயக்கன். இவன் யோகியென்றும் அந்த ஊரில், சிலர் சொல்லுகிறார்கள். ஞானப் பயித்தியங்கொண்டவனென்று சிலர் சொல்லுகிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவனுக்குக் கொட்டைய சாமியார் என்று வழங்குகிறார்கள். இவனைக் கண்டவுடனே ஜமீன்தார்:- "வாடா, கொட்டையா" என்றார். 'சாமி, புத்தி' என்றான் கொட்டையன். 'காவி வேஷ்டி உடுத்திக் கொண்டிருக்கிறாயே; என்ன விஷயம்?' என்று ஜமீன்தார் கேட்டார். கொட்டையன் மறுமொழி சொல்லவில்லை. சும்மா நின்றான். 'ஸந்யாஸம் வாங்கிக்கொண்டாயா?' என்று ஜமீன்தார் கேட்டார். 'ஆமாம்; பாண்டியா, ஊரார் வீட்டு ஸ்திரீகளை யெல்லாம் ஸந்யாஸம் பண்ணிவிட்டேன்' என்று கொட்டையன் சொன்னான். 'சாப்பாட்டுக் கென்ன செய்கிறாய்' என்று ஜமீன்தார் கேட்டார். |