பக்கம் எண் :

கலைகள் - கொட்டைய சாமி

"என்னுடைய பெண்டாட்டிக்கு அரண்மனையில் சமையலறையில் வேலையாயிருக்கிறது. அவள் அங்கிருந்து பேஷான நெய், தயிர், சாதம், கறி, எல்லாம் மஹாராஜா போஜனம் பண்ணு முன்னாகவே எனக்குக் கொணர்ந்து தருகிறாள். ஆதலால், பரமசிவனுடைய கிருபையாலும், மஹாராஜாவின் கிருபையாலும்,மேற்படி பெண்டாட்டியின் கிருபையாலும் சாப்பாட்டுக்கு யாதொரு "கஷ்டமுமில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"துணிமணிகளுக்கு என்ன செய்கிறாய்?"  என்று ஜமீன்தார் கேட்டார்.

கொட்டையன் மறுமொழி யொன்றுஞ் சொல்லவில்லை. சும்மா நின்றான்.

அப்போது ஜமீன்தார் அவனை நோக்கி:- "நாலாநாள் இரவில் நீ கீழவாயிலோரத்திலுள்ள பாம்பலம்மன் கோயிலிலிருந்து சில கற்சிலைகளையும், ஒரு வேலாயுதத்தையும் வேஷ்டிகளையுந் திருடிக்கொண்டு வந்தாயாமே; அது மெய்தானா!" என்று கேட்டார்.

"இல்லை, பாண்டியா திருடிக்கொண்டு வரவில்லை. சும்மா எடுத்துக்கொண்டு வந்தேன்" என்று கொட்டையன் சொன்னான்.

இதைக் கேட்டவுடனே ஜமீன்தார் கலகல வென்று சிரித்தார். பக்கத்திலிருந்த மற்றப் பரிவாரத்தாரும் சிரித்தார்கள்.

அப்போது ஜமீன்தார் கேட்கிறார்:- "சரி, கொட்டையா, நீ திருடவில்லை; சும்மா எடுத்துக்கொண்டு வந்தாயாக்கும். சரி, அப்பாலே என்ன நடந்தது?" என்றார்.

"கோயிற் பூசாரி சில தடியாட்களுடன் என் வீட்டுக்கு வந்து ஸாமான்களைக் கேட்டான். சிலைகளையும் துணிகளையும் திரும்பக்கொடுத்து விட்டேன். வேலாயுதத்தை மாத்திரம் கொடுக்கவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"ஏன்?" என்று ஜமீன்தார் கேட்டார்.

"அந்த வேலை எங்கள் வீட்டுக் கொல்லையில் மந்திரஞ் சொல்லி ஊன்றி வைத்திருக்கிறேன். அத்தனை பயல்களுங் கூடி அதை அசைத்து அசைத்துப் பார்த்தார்கள். அது அணுவளவு கூட "அசையவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"அவ்வளவு பலமாக ஊன்றி விட்டாயா?"  என்று ஜமீன்தார் கேட்டார். "இல்லை, பாண்டியா, அதை ஒரு பூதம் காப்பாற்றுகிறது. ஆதலால் அசைக்க முடியவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.இதைக் கேட்டவுடன் ஜமீன்தார் கலகலவென்று சிரித்தார். ஸபையாரும்நகைத்தனர்.

அப்போது, ஜமீன்தார் கொட்டையனை நோக்கி, "ஏதேனும் பாட்டுப் பாடு; கேட்போம்" என்றார்.

"உத்தரவு; பாண்டியா என்று சொல்லிக் கொட்டையன் கண்ணனைப் போலவே கூத்தாடிக் கொண்டு பின்வரும் டொம்பப் பாட்டுகள் பாடலானான்.