இங்ஙனம், தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி முதலிய வேறு பல வகைகளுமிருந்தன. 'பிள்ளைத் தமிழ்' என்ற நூல் வகுப்பைக் காண்க. இவற்றிலே, தாலாட்டு, ஊஞ்சல், அம்மானை, பள்ளியெழுச்சி என்ற நான்கு வகையும்வெவ்வேறு சந்தங்களுடன் இக்காலத்தில் நமது பெண்களுக்குள் வழங்கி வருதல் காண்கிறோம். பழைய காலத்து வகைகளை நாம் விஸ்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய ஸௌகரியங்கள் இல்லை. "ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம். குடும்பத்துப் பெண்களிலே சாஸ்திரப்படி ஸங்கீதம் கற்றுக்கொள்வோரின் தொகை மிகவும் குறைவு. நகரப் பழக்கமும் சுக ஜீவனமும் உடைய குடும்பங்களில் மாத்திரமே பெண்களுக்கு வாத்தியார் வைத்துப் பாட்டுக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆயினும், வாத்தியார் இல்லாமல் சாஸ்திர வழிகளில் வாஸனை ஏற்பட்டவர் பலர் உண்டு. இவர்களை யல்லாது, பொதுப் படையாகப் பார்க்குமிடத்து, நமது மாதர் பாட்டுக்களின் இனம் பின்வருமாறு:- (1) கல்யாணப் பாட்டு.நலங்கு, பத்யம், ஊஞ்சல், ஓடம் முதலியன.(2) கும்மிப் பாட்டு. குதித்துப் பாடுகிற பாட்டுக்கள்.இவ் வகுப்பில், கிளிப் பாட்டு, பல்லிப்பாட்டு முதலியனவும் அடங்கும். (3) அம்மானை, தூது, மாலை, சோபனம் முதலிய நீண்ட கதைப் பாட்டுக்கள்.(4) பொதுத் தாலாட்டு, விளையாட்டுப் பாட்டுக்கள், ஜாவளிகள், கீர்த்தனை முதலியன. மேலும், பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான மெட்டுக்கள் வைத்துக் "கொண்டிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட பாட்டுக்களில் மிக இன்பமான சந்தங்கள் பல இருக்கின்றன. இவை கால வெள்ளத்தில் மறைந்துபோகு முன்பாக ஸங்கீத வித்வான்கள் பொறுக்கியெடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே சேர்த்து விடவேண்டும். பெண்களுக்குக் கல்விப் பயிற்சி. ஏற்பட்டால் இப்போதுள்ள கொச்சை மொழிகளும், பிழைகளும், ரஸக் குறைவும் பொருந்திய பாட்டுகளை மறந்து விடுவார்கள். ஆனால், அத்துடன் பழைய ஸங்கீதக் கட்டுக்களை மறந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய வழிகளை முற்றிலும் மறந்துபோய் நமது பெண்கள் நாடக மெட்டுக்கள் முதலியவற்றையே பாடத் தொடங்கிவிட்டால், தமிழ் நாட்டில் ஸங்கீத வுணர்ச்சி நாசமாய்விட ஹேது உண்டாகும். |