பக்கம் எண் :

கலைகள் - பெண்ணின் பாட்டு்

கொச்சை மொழிகளும் ரஸக் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்னோம். ஆனாலும் ஒரு கூடைப் பதரில் ஓருழக்கு அரிசி யகப்படும். அதை நாம் இழந்துவிடக்கூடாது. கவிதைத் தேட்டமுடையோர் நமது பெண்களின் பாட்டைத் தேடிப் பார்த்தால், சிற்சில விடங்களில் நல்ல கவிதை கிடைக்கும். பாட்டி ராமாயணத்தில் குசலவரின் கதையை ஒரு நீளப்பாட்டாகச் சொல்லுவாள். அதில் சீதையின் கஷ்டங்களைக் கேட்கும்போது குழந்தைகளெல்லாம் கண்ணீர் விட்டழும். ராமனைக் குசலவர் வெல்லும் இடத்து வரும்போது மனதிலே ஆத்திரம் பொங்கும். 'ராமனுக்கு வேணும்; "நன்றாக வேணும் என்று தோன்றும். நலங்குப் பாட்டு, கும்மி முதலிய வற்றிலேகூடச் சில இடங்களிலே முத்துபோல வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரஸமானது. சந்தமும் இன்பம்; ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.

பெண்களின் பாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களில் பெரும் பகுதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் சம்பந்தமாக இங்கே இன்னும் சில வார்த்தைகள் சேர்க்க விரும்புகிறேன். வீட்டிலே பந்துக்களின் முன்பும், விவாக ஸந்தர்ப்பங்களிலும் பாடும்போது கூச்சத்தினாலே பாட்டை விடக்கூடாது. வித்தை விஷயத்தில் கூச்சங்காட்ட நியாயமில்லை. வித்தைப் பயிருக்கு விடுதலை நீர் பாய்ச்ச வேண்டும் மேலும் பெண்களுக்குள்ளே பொதுக் கல்வியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கவேண்டும். கல்வியறிவில்லாத மூடர் எந்தத் தொழிலும் நேரே செய்ய மாட்டார்கள். தவிரவும் பார்ஸி மெட்டிலே ஆரத்தி யெடுப்பது, இங்கிலீஷ் நலங்கு முதலிய கோரமான விகாரங்களுக்குத் துணை செய்யக்கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையுங்காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுகளை கவனியாமல்இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்.