பக்கம் எண் :

கலைகள் -  அபிநயம்

கூத்தில் அபிநயமே பிரதானம்

தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலேதோற்றுவிப்பதே கூத்தின் உடல். அபிநயமே கூத்தின் உயிர். தாளந் தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது.

தற்காலத்தில் சில பாகவதர்கள் கதாகாலக்ஷேபங்களில்இடையே கொஞ்சம் கூத்தாடிக் காட்டுகிறார்கள். இதற்குச்சிலர், "பட்டணம் கிருஷ்ண பாகவதரின் வழி" என்று பெயர் சொல்லுகிறார்கள். 'இந்தக் கூத்து வெறுமே யதார்த்த நாட்டியமென்று பிறர் நினைக்க வேண்டும்' என்று உத்தேசித்தே அந்த பாகவதர்கள் அப்படிச் செய்கிறார்கள்.

பாகவதர் ஒருவர் வேதபுரத்தில் நந்தனார் சரித்திரம்நடத்தினார். நந்தன் அடிமை, ஐயர் ஆண்டை. ஐயருக்கு முன்னே நந்தன் போய் நிற்கிறான். "நைச்ய" பாவம் என்றது நைச்யத் தோற்றம். நைச்யம் என்பது நீசன் என்ற சொல்லடியாகத் தோன்றி நீசத்தன்மை என்று பொருள்படும் குணப்பெயர். இங்கு நீசன் என்பது அடிமை. எனவே, நைச்ய பாவமென்றால் அடிமைத் தோற்றம். இதை, அந்த பாகவதர் பல அபிநயங்களினாற் காட்டினார். நிரம்ப நேர்த்தியான வேலை செய்தார். புருவத்தை அசைக்கிற மாதிரிகளும், கடைக்கண் காட்டுகிற மாதிரிகளும், தோளையும் வயிற்றையும்குலுக்குகிற மாதிரிகளும், மெல்ல மெல்ல பாகவதருடைய அபிநயங்கள் பக்தி ரஸத்திலிருந்து சிருங்கார ரஸத்தின் தோரணைகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்படி சிருங்காரத்தின்அபிநயங்களிலேயும் மேற்படி பாகவதர் குற்றமில்லை. புருவமும்,கடைக்கண் முதலியவற்றை மிகத் திறமையுடன் வெட்டுகிறார். சிருங்கார ரஸத்திற்கு, ''பாவம் ரதி; சந்திரன், சந்தனம் முதலியனஉத்தீபனங்கள் அல்லது தூண்டுதல்கள்'' என்றும் சாஸ்திரம்சொல்லுகிறது. மேற்படி பாகவதர் சந்திரன் முதலியவற்றைக் கண்ணாலே குறிப்பிடுகிறார்.

ஆனால் இவர் புருஷராக இருந்தும் புருஷாபி நயங்கள் குறைவாகவும், நாயிகாபிநயங்கள் அதிகமாகவும் கற்றிருக்கிற விந்தை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நைச்ய பாவத்திலே, அதாவது அடிமைத்தோற்றம் காட்டுவதிலேகூட, இவர் இந்தப் பெண்மையைக் கலப்பதனால் அதிக மிசிரம் ஏற்படுகிறது. ஆண்டையின்முன்னே வந்து நிற்கும் நந்தன் பறையன் பாதியும் தாஸி பாதியுமாகக் காட்டுகிறார்.