பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி

தேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே நமது முன்னோர் குடிக்கட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும்.

குடும்பக் கல்வி

தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்.

வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில்யோக்கியன் நாட்டிலும் யோக்யன்; வீட்டில் பொறுமையுடையவன்"நாட்டிலும் பொறுமை யுடையவன்.மனைவியின் பொருளைத் திருடமனந்துணிந்தோன் கோயிற் பணத்தைக் கையாடக் கூசமாட்டான்.தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பக்ஷபாதஞ் செய்பவன் ஊரில் நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாட்டான். குடும்பம் நாகரீக மடையாவிட்டால், தேசம் நாகரீக மடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில், தேசத்தில் விடுதலை இராது.

ஒரு குடும்பத்தார் கூடித் துன்பமில்லாமல் வாழ்வதைக் காட்டுமிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணமாக, ஆதியில் மனிதர் காட்டை அழித்து வீடு கட்டினார்கள். பல வீடுகள் கூடி, ஊர் ஆயிற்று.

வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும்.'விடத்தக்கது வீடு' என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று."'விடத்தக்கது வீடு' என்பது கற்றோர் துணிபாயின், அக் கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும். குழந்தைகள் வீட்டையே அரணாகக் கருதுகிறார்கள். ஸ்திரீகளும் அப்படியே செய்கிறார்கள்.இடை வயதிலுள்ள ஆண் மக்கள் பெரும்பாலும் வீட்டைக்காட்டிலும் வெளி இடங்களில் அதிக இன்பம் காண்கிறார்கள்.இந்த விஷயத்தில், குழந்தைகள், ஸ்திரீகள் முதலியோர்களின்கொள்கையை ஆண்மக்கள் பின்பற்றுதல் தகும் என்றுநம்புகிறேன். 'வீட்டிலிருந்து வெளியே ஓடிப்போய், வீட்டாருடன் கலகம் பண்ணிக்கொண்டு வாழ்வதே மேல்' என்று கருதும் மக்களின் கூட்டங்களே பெரிய படைகளாய், உலகத்தில் பெரிய போர்களை நிகழ்த்தி, எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகச் செய்கின்றன. வீடு துயரிடம் ஆவதற்குக் காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே. வீட்டில் அண்ணன்தம்பிகளையும் தாய் தந்தையரையும்,அக்கா தங்கைகளையும், பெண்டு பிள்ளைகளையும் அடிமைப்படுத்தி ஆளச் சதிசெய்யும் ஜனங்களின் கூட்டங்களே தேசங்களையும் அடக்கி அடிமையாக்கி ஆளச் சதி செய்கின்றன.