பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி

        ஆனால், தேசீயக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் ஸாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது,குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ, தேசீயக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனைவாழ்க்கைக்கும் பொருந்தாது. மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும் 'இன்று வேறு மனைவி, நாளை வேறு மனைவி' என்றால், குழந்தைகளின் நிலைமை என்னாகும்?  குழந்தைகளை நாம் எப்படி ஸம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால், குழந்தைகளுடைய ஸம்ரக்ஷணையே நாடி ஏகபத்நீவ்ரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப் பட்டது.

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது 'தேசீயம்' என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்கவேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்கவேண்டும்.இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்யபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்றுநினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரததேச முழுதிலும் எப்போதும்போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரததேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழிதலைமை பெற்றுத் தழைத்திடுக.

ஆரம்பப் பள்ளிக்கூடம்

உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாகஎத்தனை பள்ளிக்கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில், மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்குச் சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்குக் குறையாமல் ஏற்படுத்தவேண்டும். இந்த உபாத்தியாயர்கள் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளாகஇருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய் தவறினவர்கள்கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக, இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும்தேசீயப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று. அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆரோக்கியமும் திடசரீரமுமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று..