(எ) ஸயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம் ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத்தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் மூலமாகவும்பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும்அவசியமாகும். பிள்ளைகளுக்குத் தாங்களே 'ஸயன்ஸ்'சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். வியாபார விஷயங்களுக்கு ரஸாயனசாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால் ரஸாயன பயிற்சியிலேஅதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாதநுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும், காற்று மூலமாகவும்,மண் மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்றவிஷயம் ஐரோப்பிய 'ஸயன்ஸ்' மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பதுமெய்யே யாயினும், மனம் சந்தோஷமாகவும் ரத்தம்சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும்செய்யமாட்டா என்பதை ஐரோப்பியப் பாடசாலைகளில்அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தைநம்புவோர் வாழ்நாள் முழுவதும் ஸந்தோஷமாய் இராமல் தீராதநரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசீய ஆரம்பப்பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப்பற்றின பயம் மாணாக்கருக்குச்சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும். உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும்சமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழயாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்றமஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள்தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்றுஅந்த மூடக்கொள்கையை நமது தேசத்தில் இளஞ் சிறுவர்மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்து விட்டார்கள். சிறுபிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்கமுடியாதன. எனவே,நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்தபிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்குஆளாய் தீராத கவலைகொண்டு மடிகிறார்கள்; பூச்சிகளால்மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும்பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படிசெய்யவேண்டும். பௌதிக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும்தெளியான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும்ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்கவேண்டும். இயன்றஇடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையேஉபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக, "ஆக்ஸிஜன்","ஹைட்ரஜன்", முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராண வாயு, ஜலவாயு என்றநாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள அகப்படாவிட்டால் ஸம்ஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்குமட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல்பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாதஇடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள்இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்குஇங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது.பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில்சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின். |