பக்கம் எண் :

சமூகம் - பாடங்கள்

(ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம்.

இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும், " விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்யமான கைத்தொழில்களிலும், நன்செய்ப்புன்செய்ப் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள்விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படிசெய்தல் நன்று. இதற்கு மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத்தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப்படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லௌகிகப் பயிற்சி யடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.

(ஐ) சரீரப் பயிற்சி

தோட்டத் தொழிகள், கிணறுகளில் ஜலமிறைத்தல்முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும்.பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலியஅவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு "முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து  (Foot ball)முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடையபடிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப் படவேண்டும்; குஸ்தி,கஸரத், கரேலா முதலிய தேசீயப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப் படலாம். கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸௌகர்யப்பட்டால் இங்கிலீஷ்பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை. ஸமக்கட்டைகள் (parallelbars), ஒற்றைக் கட்டை  (horizontal bar)  முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம்.படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிகசிரத்தை எடுக்கும்படி செய்யவேண்டும். 'சுவரில்லாமல்சித்திரமெழுத முடியாது.' பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராததுக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.

(ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)

பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும்தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள், திருவிழாக்கள்முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின்உட்பொருளைக் கற்பித்துக்கொடுத்தல் நன்று. திருவிழாவுக்குவந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடைபாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்யவேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்.அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும் பரஸ்பரஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்றுஇயற்கையின் அழகுகளையும், அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும். பல விதமான செடி, கொடிகள், மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின்இயல்பைத் தெரிவிக்க வேண்டும்.