ஸ்ரீீம்; ஸ்ரைம்; ஸ்ரைம்; ஓம் - தாஸ: என்ற மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இம் மந்திரங்களின் பொருள் யாதெனில் - ஸ்ரீம் - லக்ஷ்மியை (ஸ்ரீீ-திரு என்றவை ஒரு மொழியின் வடிவங்கள்.) ஸ்ரைம் - ஆச்ரயிக்கிறேன்: சார்ந்துநிற்கிறேன்; ஆதலால், ஸ்ரைம் - அசைகிறேன், ஓம் - ப்ரணவம்=ப்ர+நவம்=மேன்மேலும் புதிய நிலை. எப்போதும் க்ஷணந்தோறும் புதிய புதிய உயிருடன் என்றும் அழியாத அமிர்த நிலை பெற்று விளங்குவேன். தாஸ:=அடியேன். இப்பொருளுடைய மந்திரங்களை துர்க்காஸ்துதி சேர்ந்த கீதைப் பதிப்புடன் ஆரம்பத்தில் போட்டது மிகவும் பொருத்தமுடைய செய்கையே யாம். மஹா சக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்குத் துணைபுரிகிறாள். ஆதலால் பெண்ணை ஆச்ரயித்த வாழ்க்கையே தேவ வாழ்க்கை. "வந்தே மாதரம்" என்பதும் "ஓம் ஸ்ரீம்" என்பனவும் நம்முடைய தேசக் கல்விச்சாலைகளின் வாயிற் கதவுகளிலும் கொடிகளிலும் பொறிக்கத்தக்க மந்திரங்களாம். மேலும் அந்தப் பதிப்பின் மூன்றாம் ஏட்டின் முதுகுப் புறத்தைத் திருப்பினால், அதில்நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கண்ணன் நடத்த, அதில் அர்ஜூனன் வீற்றிருப்பதைப்போல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது; இஃது ஆண்மக்கள் "ஒருவருக்கொருவர் நட்புச் செலுத்த வேண்டிய நெறியைக் காட்டுவது. ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் பாவனை செய்யவேண்டும்? நர நாராயணரைப்போலே. நீ உனது மித்திரனைக் கண்ணனாகவும், உன்னைப்பார்த்தனாகவும், அவன் உன்னைக் கண்ணனாகவும், தன்னைப் பார்த்தனாகவும் உணர்ந்து கொள்ள வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும் குறிக்கப்படுவது. இந்த நெறி தேசீயக் கல்விச் சாலைகளில் கற்பிக்கும் விஷயங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்படவேண்டும். |