பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி (2)

ஹிந்து முஹம்மதிய ஸமரஸம்

தேசீயக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை

வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்தியப் பத்திராதிபர் முதலிய பொதுச் சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய் விட்டன. மஹான் முஹம்மது "அலி, அவர் அண்ணன் ஷௌகத் அலி, ஸேட்யாகுப் ஹுஸேன், பெரிய ஜின்னா, மஹமதா பாத்ராஜா முதலிய மேலோர்களின் ப்ரத்யதனத்தால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக் கண்டத்தாருக்குக்கூட சம்சயம் ஏற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிபோல் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும்பட்டாணிய அராபிய பாரஸீக மொகலாய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர்ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்; சீனத்தில் பிறந்தவன் சீனன்; ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக் கூடாது?

இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.

(2) கிறிஸ்தவர்

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக் கல்வியில் ரிக்வேதமும், குரானும், பைபிலும் ஸமானம். கிறிஸ்து,கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் ஹிந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.